மார்வல் மற்றும் டிசி யூனிவர்ஸ் எனப்படும் பட-சீரிஸ்கள்தான் ஹாலிவுட் திரையுலகையே பல ஆண்டுகளாக ஆண்டு வருகிறது. ஐயர்ன் மேன், கேப்டன் அமெரிக்கா, ஸ்பைடர் மேன், ஹல்க் என பல சூப்பர் ஹீரோக்கள் நிறைந்த மார்வல் படங்கள் ஒருபுறம்…பேட்மேன், சூப்பர்மேன், வன்டர் வுமன் உள்ளிட்ட பல சூப்பர் ஹீரோக்கள் நிறைந்த டிசி உலகம் ஒருபுறம் என இரண்டு யுனிவர்ஸிற்கும் பல கோடி ரசிகர்கள் உள்ளனர். 


ஜஸ்டிஸ் லீக், பேட்மேன் Vs. சூப்பர்மேன், ஸேக் சின்டர்ஸ் ஜஸ்டிஸ் லீக் உள்ளிட்ட பல படங்களில் பேட்மேனாக வந்தவர்தான் பென் ஆஃப்ளெக். டிசி உலகின் செல்லப்பிள்ளையான இவர், விரைவில் டிசி ஸ்டுடியோசினால் தயாரிக்கப்படும் ஒரு படத்தை இயக்குவார் என கூறப்பட்டது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பென் ஆஃப்ளெக் ஒரு நேர்காணலில பேசியுள்ளார். 




டிசி படத்தை இயக்கவுள்ளதாக வதந்தி:


மார்வல் உலகின் முக்கியமான படமான, கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி படத்தின் முதல் மூன்று பாகங்களை இயக்கியவர், ஜேம்ஸ் கன். இவர், சில மாதங்களுக்கு முன்பு டிசி டீமுடன் இணைந்தார். இவர்தான், இப்போது டிசி ஸ்டுடியோசின் புதிய தலைமை செயல் அலுவலர் (CEO). இவர், சமீபத்தில் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில், “Ben, டிசியில் ஒரு படத்தினை இயக்க விரும்பியதாகலும், நாங்கள் அவர் ஒரு படத்தை இயக்க வேண்டும் என்று விரும்பியதாலும் அவரை நான் சந்தித்தேன். எங்களுக்கு தகுந்த ப்ராஜெக்டை மட்டும் இப்போது நாங்கள் தேர்வு செய்தால் போதும்” என்று குறிப்பிட்டிருந்தார். 


பென், இதற்கு முன்னர் லிவ் பை நைட் மற்றும் ஆர்கோ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். பேட்மேன் படம் ஒன்றை இயக்க திட்டமிட்டிருந்ததாகவும் சில ஆண்டுகளுக்கு முன்பு நடைப்பெற்ற நேர்கானல்களில் கூறியிருந்தார். ஆனால், அதற்கேற்ற சமயம் வராததால் அந்த ப்ளானை அப்படியே விட்டுவிட்டார். ஜேம்ஸ் கன்னின் பதிவையடுத்து பென் ஆஃப்ளெக் டிசியின் அடுத்த படத்தினை இயக்குவார் என கூறப்பட்டது. ஆனால்,  இந்த வதந்திகளுக்கு பென், முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 


“டிசி படத்தினை இயக்கும் ஐடியாவே இல்லை..”


பென், சமீபத்தில் பிரபல ஹாலிவுட் நாளிதழ் ஒன்றிற்கு பேட்டி கொடுத்திருந்தார். அதில், அடுத்த டிசி படத்தினை பென் இயக்கவுள்ளாரா என கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர் பின்வருமாறு பதிலளித்துள்ளார். 




“ஜேம்ஸ் கன்னிற்காக நான் எந்த படத்தையும் கண்டிப்பாக இயக்கமாட்டேன். இதனால் நான் ஜேம்ஸிற்கு எதிரானவன் என்று அர்த்தம் கிடையாது. அவர் நல்லவர்தான், அவரது வேலையில் கண்ணும் கருத்துமாகத்தான் இருக்கிறார். ஆனால், அவர்க்ள இழுக்கும் இழுப்பிற்கெல்லாம் என்னால் ஒரு படத்தினை இயக்க முடியாது. எனக்கு அதில் விருப்பமும் இல்லை..” என திட்டவட்டமாக பதிலளித்துள்ளார். இதனால், பென் ஆஃப்ளெக் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. 


கடும் கடுப்பில் ரசிகர்கள்!


2025ஆம் ஆண்டில் புதிதாக ஒரு சூப்பர் மேன் படம் வெளியாக உள்ளது. ஆனால் அந்த படத்தில் இதுவரை சூப்பர் மேனாக நடித்து வந்த ஹென்றி கேவல் நடிக்கப் போவதில்லை. இதனை, அவரே சில மாதங்களுக்கு முன்பு தனது சமூக வலைதள பக்கங்களில் வருத்தத்துடன் தெரிவித்திருந்தார். மேலும், டிசி தலைவர் ஜேம்ஸ் கன் “சூப்பர் கேர்ள்” எனும் ஒரு படத்தையும் உருவாக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது பென் ஆஃப்ளெக்கும் டிசியில் எந்த படத்தையும் இயக்கப் போவது இல்லை என தெரிவித்துள்ளார். இதனால், டிசியின் புது தலைவர் ஜேம்ஸ் கன்னின் மீது ரசிகர்கள் சரியான கடுப்பில் உள்ளனர்.