காஷ்மீர் ஃபைல்ஸில் சொல்லப்பட்ட காஷ்மீர் பண்டிட்கள் கொல்லப்பட்டது, மாடுகளை கொண்டு செல்லும் இஸ்லாமியர்களை வழிமறித்து அவர்கள் மீது தாக்குதல் நடத்தி ஜெய் ஸ்ரீராம் என்று சொல்ல கட்டாயப்படுத்துவது ஆகிய இரண்டுமே ஒன்றுமேதான் என்று சாய்பல்லவி பேசியிருக்கிறார்.
இது குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கும் சாய் பல்லவி, “என்னை பொருத்தவரை வன்முறை என்பது ஒரு தவறான விஷயம். நான் ஒரு நடுநிலையான குடும்பத்தில் பிறந்தவள். எனக்கு சொல்லிக்கொடுக்கப்பட்டதெல்லாம் நான் ஒரு நல்ல மனிதனாக இருக்க வேண்டும் என்பதுதான்.
அதே சமயம் ஒடுக்கப்பட்டவர்கள் நிச்சயம் பாதுக்கப்பட வேண்டும். காஷ்மீர் பண்டிட்டுகள் கொல்லப்படுவது, மாடுகளை கொண்டு செல்லும் இஸ்லாமியரை வழிமறித்து அவர்கள் மீது தாக்குதல் நடத்தி ஜெய் ஸ்ரீராம் என்று சொல்ல கட்டாயப்படுத்துவது ஆகிய இரண்டுமே ஒன்றுதான். இங்கு வலது சாரி சிந்தனையாளர்களும் இருக்கிறார்கள் இடது சாரி சிந்தனையாளர்களும் இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் யார் சரி, யார் தவறு எனக்கு தெரியாது. நீங்கள் நல்ல மனிதராக இருக்கும் பட்சத்தில் நீங்கள் யார் சரியாக இருக்கிறார்கள் என்பது குறித்து கவலைப்படத்தேவையில்லை.
சாய் பல்லவியின் நடிப்பில் கடைசியாக தெலுங்கில் வெளியான ஷியாம் சிங்கா ராய் படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த நிலையில் இவரது நடிப்பில் அடுத்தாக வெளியாக இருக்கும் திரைப்படம் விராட பர்வம். இயக்குநர் வேணு உடுகலா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் ராணா டகுபதி, பிரியாமணி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்தப்படம் தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் சாய் பல்லவியை ரசிகர்கள் நெருங்க ஆரம்பிக்க, நடிகர் ராணா டகுபதி சாய்பல்லவியை பாதுகாக்கும் விதமாக பாடிகார்டு போல செயல்பட்டார். எந்த ஈகோவும் இல்லாமல் அவர் இப்படி நடந்துகொண்டது சமூக வலைதளங்களில் பாராட்டைப் பெற்று வருகிறது.