இந்திய அளவில் பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்சனில் நம்பர் 1 இடத்தைப் பிடித்து ஜுராசிக் வேர்ல்ட் டொமினியன் படம் சாதனை படைத்துள்ளது.


'ஜுராசிக் வேர்ல்ட்'  படங்களின் வரிசையில் இறுதி பாகமாக  'ஜுராசிக் வேர்ல்ட் டொமினியன்’கடந்த ஜூன் 10ஆம் தேதி உலகம் முழுவதும், வெளியாகி வசூலைக் குவித்து வருகிறது. 


ஜுராசிக் பார்க் தொடரின் ஆறாவது படம்


Universal Picturesஇன் இந்த படத்தில், இதன் முந்தைய பாகங்களில் நடித்த க்ரிஸ் ப்ராட், ப்ரைஸ் டல்லாஸ் ஹோவார்ட், லாரா டென் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.


 






காலின் ட்ரெவர்ரோ இப்படத்தை இயக்கியுள்ளார்.  இது ஜுராசிக் வேர்ல்ட் தொடரின் மூன்றாவது பாகம் மற்றும் ஒட்டுமொத்த ஜுராசிக் பார்க் தொடரின் ஆறாவது திரைப்படமாகும்.


டைனோசர் ஃபேன்ஸிடம் வரவேற்பு


90களின் ஜுராசிக் பார்க் படம் தொடங்கி இன்றைய ஜுராசிக் வேர்ல்ட் படங்கள் வரை, டைனோசர்கள் திரையில் ஆதிக்கம் செலுத்தும் இந்தப் படங்களுக்கென்று உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளது. மேலும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரின் விருப்ப படமாகவும் இப்பட சீரிஸ் இன்றளவும் விளங்கி வருகிறது.


குறிப்பாக ஜுராசிக் வேர்ல்ட் பட சீரிஸில் நாயகன் க்ரிஸ் பிராட்டுக்கும், அவர் வளர்த்த டைனோசர் ப்ளூவுக்குமான பாசப் பிணைப்பு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது.  


இந்திய அளவில் சாதனை


இந்நிலையில், இப்படம் இந்திய ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று, வசூலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. உள்நாட்டு பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சாதனை படைத்து வரும் இப்படம், உலக அளவிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.


தமிழ்நாடு தவிர, பிற மாநிலங்களில் விக்ரம் படத்தை மிஞ்சி வசூலைக் குவித்து வரும் ஜுராசிக் வேர்ல்ட் டொமினியன், ஆரம்ப வார இறுதியில் 46 கோடி ரூபாய் வசூலித்தது. இந்நிலையில் வரும் நாள்களில் படத்தின் வசூல் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.