நடிகர் கருணாஸ் மகன் கென் இயக்கி நடித்துள்ள யூத் திரைப்படம் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் வெற்றியை பதிவு செய்துள்ளது. கென் மற்றும் படக்குழுவினரை அழைத்து நடிகர் சூர்யா நேரில் சந்தித்து பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். சூர்யா மற்றும் கருணாஸ் இருவரும் ஒரே  சமயத்தில் திரைக்கு வந்தவர்கள். இருவரும் இடையில் பல வருடங்களாக நல்ல நட்பு தொடர்ந்து வருகிறது. சூர்யாவுடன் தனது முதல் படத்தில் நடித்தபோது தனது மனைவி 9 மாத கர்ப்பினியாக இருந்ததாகவும் அப்போது சூர்யா தனக்கு கொடுத்த ஆதரவு குறித்து கருணாஸ் பேசியுள்ள வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

Continues below advertisement

மண்டியிட்டு பிரார்த்தனை செய்த சூர்யா 

சூர்யாவின் சிங்கம் பட இசை வெளியீட்டில் கருணாஸ் பேசியபோது 'நான் இந்த சினிமாவில் மாமாவென்று அழைக்கிற ஒரே மனிதன் சூர்யா மட்டும்தான். அதேபோல் என்னை மாமாவென்று உரிமையாக கூப்பிடுகிறவர் சூர்யா. பாலா என்னை சினிமாவில் அறிமுகப்படுத்தியபோது நான் பார்த்த முதல் ஹீரோ சூர்யா தான். நான் சினிமாவிற்கு எட்டு வருடத்திற்கு முன்னால் வந்தேன். என் மனைவியுடன் கச்சேரியில் இருந்தபோது தான் எனக்கு முதல் முறையாக சினிமாவில் வாய்ப்பு வந்தது. 9 மாத கர்ப்பமாக இருந்த மனைவியை விட்டு ராமேஸ்வரத்திற்கு ஷூட்டிங் வந்துவிட்டேன்.  குழந்தை பிறக்கும் நேரத்தில் மனைவியை தனியாக விட்டுவிட்டு வந்துட்டோமே என்று நான் படப்பிடிப்பில் அழுதுகொண்டு உட்கார்ந்திருந்தேன்.

சூர்யாதான் என்னை காலையில் நாலரை மணிக்கு எழுப்பி ஷவரை திறந்துவிட்டு என்னை குளிக்கவைத்து படம் நல்லபடியா வரும் என்று நம்பிக்கை கொடுத்தார். அதே ராமேஸ்வரம் கோவிலில் எனக்கு குழந்தை நல்லபடியாக பிறக்கவேண்டும் என்று மண்டியிட்டு எனக்காக சூர்யா பிரார்த்தனை செய்தார். அப்படியான ஒரு நல்ல ஆத்மா சூர்யா. பல பேர்களை சம்பாதித்த இந்த சினிமா எல்லாரையும் சாதாரணமாக இந்த உயரத்திற்கு கொண்டு வராது. சூர்யாவிடம் இருக்கக் கூடிய உழைப்பை நான் கண்முன்னே பார்த்திருக்கிறேன். கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொண்டு உழைத்து உழைத்து மட்டுமே இந்த உயரத்திற்கு வந்தவர் சூர்யா " என்று கூறினார். 

Continues below advertisement

தற்போது கருணாஸ் மகன் கென் வளர்ந்து ஒரு படத்தை இயக்கி நாயகனாகவும் வெற்றிகண்டுள்ள நிலையில் அவரை சூர்யா அழைத்து பாராட்டியிருப்பது நெகிழ்ச்சியான ஒரு தருணமாக ரசிகர்களால் பார்க்கப்படுகிறது