விரல் நுணியில் இணையம்; இணையம் வழியில் இமைக்கும் நொடியில் பல வேலைகள். இதுதான் இன்றைய இணைய உலகின் வாடிக்கையாகிவிட்டது.


அரசின் பல்வேறு துறைகளுமே இ சேவைக்கு மாறிவிட்டன. அந்த வகையில் ஆர்டிஓ அலுவலகங்களில் நிற்கும் கூட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க ஓர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எல்எல்ஆர் லைசன்ஸ் புதுப்பிக்க இனி ஆர்டிஓ அலுவலகத்துக்கு அலைய வேண்டாம்; ஆன்லைனிலேயே முடிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.


இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலத்துக்குப் பின் அடுத்தபடியாக மோட்டார் வாகனங்கள் எண்ணிக்கை அதிகம் உள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது.


1981ல் தமிழகத்தில் மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 21 ஆயிரமாக இருந்தது. 209 2020ல் இதே எண்ணிக்கை 2 கோடியே 77 லட்சமாக உயர்ந்துள்ளது. தற்போது இது 3 கோடியையும் தாண்டியுள்ளது. இவற்றில் 85% வாகனங்கள் இருச்சக்கர வாகனங்கள். ஏழை, நடுத்தர வகை மக்கள் இதைப் பயன்படுத்துகின்றனர்.  




இந்நிலையில், எல்எல்ஆர் எனப்படும் பயிற்சி ஓட்டுநர்கள் சான்றிதழ் பெறவும், ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிக்கவும் ஆர்டிஓ அலுவலகத்துக்கு அலைவதும் தொடர்கதையாக இருக்கிறது. கொரோனா காலத்தில் கூட்டத்தைத் தவிர்க்க வேண்டும் என்றாலும்  ஆர்டிஓ அலுவலகத்தில் அதை அத்தனை எளிதில் நடைமுறைப்படுத்திவிட முடியாது.இதையெல்லாம் கருத்தில் கொண்டே, இனி ஆன்லைனில் சான்றிதழ்களைப் பெற புதிய வசதி செய்யப்பட்டுள்ளது.



சட்டப்பேரவையில் போக்குவரத்துத்துறை மானியக் கோரிக்கை மீது அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசும்போது, ஆதார் அட்டையை அடையாள ஆவணமாகக் கொண்டு, பொதுமக்கள் ஆர்டிஓ அலுவலகத்துக்கு நேரில் வராமலேயே போகுவரத்து சேவைகளான பழகுநர் உரிமம், ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல், ஓட்டநர் உரிமத்தில் முகவரி மாற்றம் ஆகிய சேவைகளைப் பெறலாம். இது விரைவில் அமல்படுத்தப்படும் என்றார்.


அமைச்சரின் மற்ற அறிவிப்புகள் விவரம் பின்வருமாறு:


அரசு போக்குவரத்துக் கழகங்களை இயக்க வருவாயை தவுர கூடுதல் வருவாய்க்காக அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு சொந்தமான 10 இடங்களில் பெட்ரோல், டீசல், விற்பனை நிலையங்கள் அமைக்கப்படும்.


ஜெர்மனி வங்கி நிதி உதவியுடன் புதிதாக 2,213 டீசல் பேருந்துகள், காற்று மாசைக் கட்டுப்படுத்த 500 மின்சாரப் பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும்.


பொதுமக்களின் வசதிக்காக ஓட்டுநர் தேர்வு தளத்துடன் கூடிய சொந்த கட்டம் மதுரை தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ரூ.5.28 லட்சம் செலவில் கட்டப்படும். அதேபோல் கோவையிலும் வடக்கு வட்டார அலுவலகத்தில் புதிய கட்டடம் கட்டப்படும்.


திருத்தணி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு சொந்த கட்டிடம் கட்டப்படும். தற்போது இது திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இயங்குகிறது.


போக்குவரத்துத் துறையில் கணினி பயன்படுத்தும் நிலையில் பதிவுரை எடுத்தர், அலுவலக உதவியாளர், காவலர் மற்றும் ஓட்டுநர் தவிர 1583 பணியாளர்களுக்கு ஏற்கெனவே 504 கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணியாளர்களுக்கும் கணினிகள் மற்றும் அச்சுப்பொறிகள் வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.