நவீன நாகரிக வாழ்க்கை வாழ்ந்து வரும் நகரங்களில் மக்கள் அனைவரும் தினசரி பரபரப்பாக இயங்கி மன அழுத்தத்தில் இருந்து வருகின்றனர். சாலைகளில் வாகன இரைச்சல், எந்திரம் போன்ற அலுவலக வாழ்க்கை இதனுடன் பழகிப்போன பொதுமக்களை உற்சாகமூட்டும் வகையில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி அறிமுகம் செய்யப்பட்டது.
சேலத்தில் ஹாப்பி ஸ்ட்ரீட்:
இந்த நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் 9 மணி வரை நடைபெறுகிறது. இந்த நிலையில் சென்னை, திருச்சி, ஈரோடு, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை தொடர்ந்து சேலத்தில் முதல்முறையாக ஹாப்பி ஸ்ட்ரீட் கொண்டாட்டம் இன்று நடைபெற்றது.
சேலம் மாநகர் அஸ்தம்பட்டி ரவுண்டானா பகுதியில் ஹேப்பி ஸ்ட்ரீட் கொண்டாட்டமானது நடைபெற்றது. இதில் பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஒன்று திரண்டு ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை கண்டுகளித்தனர். இந்த ஹேப்பி ஸ்ட்ரீட் கொண்டாட்டத்தை பல்வேறு தனியார் நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு செய்தது.
ஆட்டம், பாட்டம்:
இந்த நிலையில் முதல் முறையாக சேலம் மாவட்டத்தில் ஹேப்பி ஸ்ட்ரீட் கொண்டாட்டம் நடத்தப்பட்டதால் சேலம் மாவட்டம் முழுவதும் இருந்து பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் என அனைத்து தரப்பு மக்களும் ஆர்வத்துடன் கொண்டாட்டத்தில் பங்கேற்றனர். குறிப்பாக ஒவ்வொரு திரைப்பாடல்களுக்கும் நடன கலைஞர்கள் மேடையில் நடனமாட, அதற்கு ஏற்றவாறு பொதுமக்கள் அனைவரும் ஒன்று திரண்டு நடனமாடியும், பாடல்கள் பாடியும் மகிழ்ந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் ஆடல், பாடல், பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்டவைகள் நடத்தப்படுவதால், இந்த கொண்டாட்டம் பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் இருந்து சாரதா கல்லூரி செல்லும் சாலையில் ஹாப்பி ஸ்ட்ரீட் கொண்டாட்டம் நடைபெற்று வருவதால், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
கண்ணாடி உடைப்பு:
சாரதா கல்லூரி சாலையில் இருந்து, வரும் வாகனங்கள் வணிகவரித்துறை அலுவலகம் அமைந்துள்ள சாலையின் வழியாக செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. ஒரே நேரத்தில் பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள், ஒரே இடத்தில் திரண்டு திரண்டதால் காவல்துறையினர் பாதுகாப்பு அதிகளவில் போடப்பட்டது. மேலும் பல இளைஞர்கள் ஆபத்தை உணராமல் டிரான்ஸ்பார்மர் மீது ஏறி கொண்டாட்டத்தை வேடிக்கை பார்த்தனர். ஹேப்பி ஸ்ட்ரீட் கொண்டாட்டத்தின் போது கார் மூலம் தற்காலிக கடைகள் போடப்பட்ட நிலையில் கார்கள் கண்ணாடியில் உடைக்கப்பட்டது.
இதனிடையே நிகழ்ச்சிக்காக இணைக்கப்பட்ட ஒயர்கள் உரசிகொண்டதால் புகைமூட்டம் ஏற்பட்டது. பின்னர் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து சரிசெய்தனர். இதன் காரணமாக ஹேப்பி ஸ்ட்ரீட் கொண்டாட்டம் சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சரி செய்யப்பட்டு மீண்டும் ஹேப்பி ஸ்ட்ரீட் கொண்டாட்டம் துவங்கி நடைபெற்றது. மேலும் சேலம் மாவட்டத்தில் பொதுமக்களின் மன அழுத்தத்தை குறைப்பதற்கு இனி மாதம் ஒருமுறை ஹேப்பி ஸ்ட்ரீட் கொண்டாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், சேலம் மாநகர காவல் துறை இணை ஆணையாளர் சந்திரமௌலி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.