லிஜின் ஜோஸ் இயக்கத்தில் பிரபல மலையாள நடிகை பார்வதி திருவோத்து, ஊர்வசி, ஐஸ்வர்யா ராஜேஷ், ரம்யா நம்பீசன், லிஜோ மோல் ஜோஸ் ஆகியோர் நடிக்கும் படம்  ‘ஹெர்’. இப்படத்தில் நடிகர்கள் குரு சோமசுந்தரம், ராஜேஷ் மாதவன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


'96' படத்தில் சிறப்பாக இசையமைத்து கவனம் ஈர்த்த கோவிந்த் வசந்தா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். அர்ச்சனா வாசுதேவ் இப்படத்துக்கு திரைக்கதை எழுதியுள்ளார். 


மலையாள சினிமாவில் முன்னணி வகிக்கும் சிறந்த நடிகைகள் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மே மாதம் திருவனந்தபுரத்தில் தொடங்கியது. வித்தியாசமான பின்னணியில் இருந்து வரும் ஐந்து பெண்களின் வாழ்க்கைப்பாதைகள் ஒன்றுடன் ஒன்று சந்தித்துக் கொள்ளும்படி இப்படத்தின் கதை இருக்கும் என முன்னதாகத் தெரிவிக்கப்பட்டது.


 






இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் பார்வதி, ஊர்வசி, ஐஸ்வர்யா ராஜேஷ், ரம்யா நம்பீசன், லிஜோ மோல் ஆகிய அனைவருமே இடம்பெற்றுள்ளனர்.


முன்னதாக பார்வதி மற்றொரு மல்டி - ஸ்டாடர் படமான வொண்டர் விமன் படத்தில் நடிகைகள் நித்யா மேனன், பத்மப்பிரியா, நதியா உள்ளிட்ட பலருடன் நடித்திருந்தார். அஞ்சலி மேனன் இயக்கிய இப்படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் முன்னதாக வெளியாகி வரவேற்பைப் பெற்றது.


கரோனா ஊரடங்கில் சந்தித்துக் கொள்ளும் கர்ப்பிணிகள் பற்றிய இப்படத்துக்காக, முன்னதாக நடிகைகள் பார்வதி, நித்யா, பத்மபிரியா, அம்ருதா சுபாஷ், சயனோரா பிலிப் , அர்ச்சனா பத்மினி ஆகிய அனைவரும் கர்ப்ப கால பதிவுகளை தங்கள் இணையப் பக்கங்களில் பகிர்ந்து கவனம் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.