‘ஓ காதல் கண்மணி’ திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் துல்கர் சல்மான். இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். ”சென்சேஷனல் ஹீரோப்பா இவரு ” என ரசிகர்கள் கூறும்படியான அங்கீகாரத்தை பிடித்தவர் துல்கர்.மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகர் மம்முட்டியின் மகன்தான் துல்கர் என்பது குறிப்பிடத்தக்கது. என்னதான் வாரிசு நடிகராக இருந்தாலும் ,துல்கர் தனக்கான அங்கீகாரத்தை பிடிக்க  ஒன்பது ஆண்டுகள் உழைக்க வேண்டியிருந்தது. கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான ‘செகண்ட் ஷோ ‘ என்ற திரைப்படம் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.


அதன் பிறகு சினிமா இவருக்கு சிகப்பு கம்பளம் விரிக்கவில்லை. இருந்தாலும் துல்கருக்கு சினிமா மீது இருந்த ஆர்வமும் தன் மீதான நம்பிக்கையும்,  தொடர்  பொருமையும் , கடின உழைப்பும் இன்று  இவரை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றுள்ளது. துல்கர் இன்று தனது 31 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்  பிறந்த நாளை முன்னிட்டு அவர் கமிட்டாகியுள்ள புதிய தெலுங்கு படம் ஒன்றின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மேக்கிங் வீடியோவை வெளியிட்டு தயாரிப்பாளர்கள்  துல்கருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர் படக்குழு. 



பெயர் வைக்கப்படாத அந்த படத்திற்கு தற்போது “புரடக்‌ஷன் நம்பர் 7” என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் லெப்டினன்ட் ராம் என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார் துல்கர்.  சுதந்திரம் அடைவதற்கு முன்பான கதைக்களத்தை இந்த படம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் சைக்கிளின் பின்புறம் அமர்ந்துகொண்டு , கையில் காகிதம் ஒன்றை வைத்துக்கொண்டு கியூட்டாக சிரிப்பது போன்ற ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிந்த துல்கர்., “எனக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி!  எனது படத்தின் தயாரிப்பாளர்கள் மற்றும் கப்பலின் கேப்டனான இயக்குநருக்கு நன்றி! இப்படியான ஒரு புகைப்படத்தை வெளியிட்டு எனக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துவிட்டனர். இது என்னால் மறக்க முடியாக பிறந்த நாள் பரிசு , இதனை உங்களோடு இங்கே பகிர்ந்துக்கொள்வது மகிழ்ச்சியாக இருக்கிறது “ என குறிப்பிட்டுள்ளார்.






துல்கர் சல்மான் மலையாள சினிமா மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு , இந்தி என இந்திய சினிமாவில் முக்கிய நடிகராக மாற தொடங்கியுள்ளார். இவர் நடிப்பில் வெளியான கம்மட்டிபடம், சார்லி, மகாநதி , ஓ காதல் கண்மணி போன்ற படங்களின் கதாபாத்திரங்கள் இவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்திக்கொடுத்தது. இதில் சார்லி படத்திற்கு சிறந்த நடிகருக்கான மாநில விருது துல்கருக்கு கிடைத்திருந்தது. நடிகராக மட்டும்  இருந்துவிடாமல் தற்போது தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார்.