பிரபல பாலிவுட் இயக்குநரும் தயாரிப்பாளருமான அனுராக் காஷ்யப் தனது டிவிடி கலெக்‌ஷன் குறித்து சமீபத்தில் பேசியுள்ளார். 


`நான் கடந்த 2000ஆம் ஆண்டு முதல் டிவிடிக்களை சேகரித்து வருகிறேன். அப்போது நான் இயக்குநர் விது வினோத் சோப்ராவின் `மிஷன் காஷ்மீர்’ திரைப்படத்தில் பணியாற்றி வந்தேன். அனைத்து தயாரிப்பாளர்களையும் போல, அவரும் என்னிடம் தொடக்கத்தில் அட்வான்ஸ் பணமும், படம் முடிவடைந்த பிறகு மீதித் தொகையையும் தருவதாகக் கூறியிருந்தார். அப்போது டிவிடி ப்ளேயர் விலை அதிகம் என்பதால், எனக்கு முன்பணம் வேண்டாம் எனவும், டிவிடி ப்ளேயர் வேண்டும் எனவும் கேட்டிருந்தேன். எனகு முதல் டிவிடி ப்ளேயரின் விலை 22 ஆயிரம் ரூபாய். `வாட்டர்’ படத்தின் இந்தி வசனம் எழுதும் பணியில் நான் இருந்த போது, தீபா மேத்தா என்னுடைய கலெக்‌ஷனின் முதல் 6 டிவிடிக்களை தந்தார். `தி வைல்ட் பன்ச்’, `டாக்ஸி ட்ரைவர்’, `மீன் ஸ்ட்ரீட்ஸ்’ முதலான திரைப்படங்களின் டிவிடிக்கள் அவர் அளித்தவை’ எனக் கூறியுள்ளார் அனுராக் காஷ்யப். 


தொடர்ந்து பேசிய அனுராக் காஷ்யப், `அதனைத் தொடர்ந்து எனக்கு எப்போதெல்லா வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் திரைப்படங்களை டிவிடியாக விலை கொடுத்து வாங்குகிறேன். உலகம் முழுவதும், அனைத்து மொழிகளிலும் வெளியான திரைப்படங்களைச் சேகரித்து வருகிறேன். மும்பையின் சாரியாட் லைப்ரரியில் இருந்து முழு க்ரைடீரியான் பாக்ஸ் செட்டை வாங்கினேன். அப்போது என்னிடம் அவ்வளவு பெரிய தொகை இல்லாமல் இருந்த போதும், 1.5 லட்சம் ரூபாய் பணத்தை மூன்று மாதங்களில் படிப்படியாக செலுத்தினேன்’ எனக் கூறியுள்ளார். 



தன்னிடம் இருக்கும் டிவிடிக்களின் எண்ணிக்கையை 10 ஆயிரத்திற்கு மேல் கணக்கு வைத்துக் கொள்ள முடியவில்லை எனக் கூறும் அனுரா காஷ்யப் தற்போது டிவிடிக்கள் ப்ளூரேவாக மாறியிருப்பதால், அவற்றைச் சேகரிப்பதாகக் கூறுகிறார். 


மேலும் இதுகுறித்து பேசிய அனுராக் காஷ்யப், `நான் இன்றும் டிவிடிக்களை சேகரிப்பதன் காரணம் என்னவென்றால், ஓடிடி தளங்கள் தற்போது வெளியிடும் திரைப்படங்களை சில காலத்திற்குப் பிறகு நிறுத்திவிடுவார்கள் என்ற பயத்தினால் தான். தற்போது நான் பழைய க்ளாசிக் திரைப்படங்கள், மௌனத் திரைப்படங்கள் முதலானவற்றை சேகரித்து வருகிறேன். எல்லா திரைப்படங்களும் ஓடிடி தளங்களில் கிடைப்பதில்லை. மேலும், நான் வீட்டில் ஹோம் தியேட்டர் ஒன்றை நல்ல ஒலி அமைப்புடன் உருவாக்க வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். இதன் காரணமாகவே திரைப்படங்களை டிவிடி, ப்ளூரே வடிவில் சேகரித்துக் கொண்டிருக்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.  


தனது டிவிடி கலெக்‌ஷனை எப்படி பாதுகாக்கிறார் என்பது குறித்து பேசிய அனுராக் காஷ்யப், `டிவிடிக்கள் 4, 5 ஆண்டுகளில் பாழாகிவிடுகின்றன. எனக்கு அவற்றைச் சுத்தம் செய்ய தெரியும் என்பதால் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அவற்றைச் சுத்தம் செய்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.