நடிகர் அஜித் நடித்துள்ள துணிவு படம் குறித்து வெளியான தகவல் பற்றி தயாரிப்பாளர் தனஞ்செயன் சொன்ன கருத்து ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் வெளியான வலிமை படத்திற்கு பிறகு போனிகபூர்- இயக்குநர் ஹெச்.வினோத் கூட்டணியில் 3வது முறையாக நடிகர் அஜித் நடித்துள்ள படம் “துணிவு”. வங்கி கொள்ளையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் ஹீரோயினாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ள துணிவு படத்தின் திரையரங்க விநியோக உரிமையை நடிகர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு இப்படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நாளில் நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு படம் ரிலீசாகவுள்ளதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். முன்னதாக துணிவு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் ரசிகர்களிடையே வைரலானதால் நாளுக்கு நாள் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இதனிடையே நேற்றைய தினம் சமூக வலைத்தளங்களில் பல தியேட்டர்கள் பொங்கலுக்கு தங்களது திரையரங்கில் துணிவு படம் வெளியாவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுவிட்டதாக பதிவுகளை வெளியிட்டனர். இதனால் தங்களது ஊர்களில் எந்தெந்த தியேட்டர்களில் படம் ரீலிசாகப் போகிறது என்ற ஆச்சரியத்துடன் காத்திருந்த ரசிகர்களுக்கு தயாரிப்பாளர் தனஞ்செயன் சொன்ன பதில் அதிர்ச்சி அளித்துள்ளது.
பிரபல ஊடகத்தில் நேர்காணல் அளித்துள்ள அவரிடம் துணிவு படத்தை வெளியிட தியேட்டர்கள் ஒப்பந்தம் போட்டதாக சொல்கிறார்களே..அது உண்மையா? என கேட்கிறார். அதற்கு தனஞ்செயன், எதுவுமே உண்மையில்லை. அப்படி எல்லாம் எதுவும் இல்லை. அது சும்மா ஆடியன்ஸை பரபரப்பாக்க பண்ணுகிறார்கள். நாங்களும் தியேட்டர் நடத்துகிறோம். யாரும் எங்களை கையெழுத்து போட கூப்பிடலையே. ரெட் ஜெயன்ட் பொறுத்தவரை இப்ப எதுவும் பண்ண மாட்டாங்க. எவ்வளவு பெரிய படமாக இருந்தாலும் ஒருவாரம் முன்னாடி தான் இது நடக்கும்.
படம் 12 ஆம் தேதி வெளியாகும் என்றால் அதுக்கு ஒரு வாரம் முன்னாடி தான் பேசுவாங்க. முந்தைய வாரம் புதன், வியாழன் பேசுவாங்க. வெள்ளி, சனிக்கிழமையில தான் முடிவு வரும். ஞாயிற்றுகிழமை புக்கிங் ஓபன் பண்ணுவாங்க. ரெட் ஜெயன்ட் பொறுத்தவரை எல்லா தியேட்டர்களுக்கும் ஒரே மாதிரி தான் பாலிசி வச்சிருப்பாங்க. தியேட்டர்கள் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகரிக்கிறதோ அந்த அளவுக்கு தயாரிப்பாளர் சொன்ன பணத்துக்கு ஏற்றவாறு விநியோகஸ்தர்கள் லிஸ்ட் ரெடி பண்ணுவாங்க. அதுவே படம் ரிலீசாகுற 10 நாள் முன்னாடி தான் நடக்கும் என தனஞ்செயன் தெரிவித்துள்ளார்.