முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பேச்சை கண்டித்து, மூடர்கூடம் திரைப்பட இயக்குநர் நவீன் கடுமையாக விமர்சித்துள்ளார்.


ஈ.பி.எஸ் பேச்சு:


கிழக்கு தொகுதி இடைதேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு இருந்த எடப்பாடி பழனிசாமி,  திமுகவை கடுமையாக விமர்சித்து இருந்தார். அப்போது, வாக்காளர்களை ஆளுங்கட்சியினர் அடைத்து வைத்து இருப்பதாகவும், சரியான ஆம்பளையாக இருந்தால் அவர்களை விடுவித்துவிட்டு நேரடியாக மோதுங்கள் என்றும் சவால் விடுத்து இருந்தார். இதுதொடர்பான வீடியோவை குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமியை, மூடர்கூடம் இயக்குநர் நவீன் கடுமையாக விமர்சித்துள்ளார்.


நவீன் பதிலடி:


அந்த பதிவில், ஆம்பளயா இருக்கறதுக்கும் வீரத்துக்கும் என்ன தொடர்பு. உங்கள் தலைவர் இரும்புப்பெண் ஜெயலலிதா அம்மையார் ஆம்பளயா? நீங்கள் தவழ்ந்து சென்று கால்பிடித்த சசிகலா ஆம்பளயா? இன்னும் எத்தனை காலம் இந்த stereotype வசனம் பேசுவீங்க? இது பெண்களை இழிவு படுத்தும் செயல்” என நவீன் கடுமையாக சாடியுள்ளார்.


ஆதரவும், எதிர்ப்பும்:


நவீனின் இந்த கருத்துக்கு ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்தாலும், அதிமுகவினர் கடும் எதிர்வினையாற்றி வருகின்றனர். ஆளுங்கட்சியினர் தவறுசெய்யும் போதேல்லாம் கேள்வி எழுப்பாத நீங்கள், குறிப்பிட்ட கட்சிகளிடம் மட்டும் கேள்வி எழுப்பதாகவும், நவீனை டேக் செய்து சில இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 


பதிலளித்த நவீன்:


அந்த வகையில் அதிமுகவை சேர்ந்த திருநங்கை அப்சரா, இந்திரா காந்தி பற்றி கருணாநிதி என்ன சொன்னார்? எங்கள் கட்சிக்கு ஒரு பெண் தலைமை தாங்கினார். திமுகவில் பெண்கள் முதலமைச்சரின் காரில் தொங்குகிறார்கள் அல்லது Raja போன்ற மூத்தவர்களால் விபச்சாரிகள் என்று அவமதிக்கப்படுகிறார்கள். எனவே உங்கள் நாக்கை கட்டுப்படுத்துங்கள் என வலியுறுத்தினார். அதற்கு பதிலளித்த நவீன், எடப்பாடியார் மட்டுமல்ல, பொதுமேடைகளில் திரைப்படங்களில் வரும் இது போன்ற வாசகங்களை கண்டிக்க வேண்டிய பொறுப்பு, ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்தின் பிரதிநிதியாக, தங்களுக்கு சற்று அதிகமாகவே இருக்கிறது தோழர் என குறிப்பிட்டு இருந்தார்.


தொடர்ந்து கேள்வி எழுப்பும் நவீன்


மூடர்கூடம் எனும் வெற்றி திரைப்படத்தை இயக்கிய நவீன், தற்போது அலாவுதினீன் அற்புத கேமரா மற்றும் அக்னி சிறகுகள் ஆகிய திரைப்படங்களை இயக்கி வருகிறார். குறிப்பாக,அலாவுதினீன் அற்புத கேமரா திரைப்படத்தை தயாரித்து, இயக்கி வருகிறார்.  அதேநேரம், சமூகத்தில் நிலவும் பல்வேறு சம்பவங்கள் தொடர்பாக, சமூக வலைதளங்களில் அவர் கேள்வி எழுப்பி வருகிறார். குறிப்பாக நீட்,ஹிஜாப், சமூக நீதி போன்ற பல்வேறு முக்கிய விவகாரங்களில், நவீன் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.