தமிழ் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக கொஞ்சம் கூட ரசிகர்கள் மத்தியில் அவருக்கான கிரேஸ் குறையாமல் அன்று பார்த்தது போலவே இன்றும் மின்னும் ஒரு நடிகை திரிஷா. 96 திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த துவங்கிய திரிஷா மீண்டும் முன்னணி நடிகையின் இடத்தை பிடித்து விட்டார். 


 



நடிகை திரிஷாவுக்கு முன்னணி நடிகை என்ற அந்தஸ்து உடனே கிடைத்துவிடவில்லை. பல படங்களிலும் துணை நடிகையாக இருந்து பின்னர் மெல்ல மெல்ல நடிப்பு திறனை மெருகேற்றி படிப்படியாக வளர்ந்தவர். அவரின் திரை பயணத்தின் ஆரம்ப காலகட்டம் முதலே ஏராளமான அவதூறுகளை சந்தித்தே திரைத்துறையில் பயணித்து வருகிறார். 


பல நடிகர்களுடன் சேர்த்து வைத்து கிசுகிசுக்கப்பட்டார். திரிஷாவின் ஆபாச வீடியோ என இணையத்தில் வெளியாகி அவர் மீது அவதூறுகளை பரப்பியது. சமீபத்தில் கூட நடிகர் மன்சூர் அலிகான் மேடையில் நடிகை திரிஷா பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பூதகரம் எடுத்து வழக்குப்பதிவு வரை சென்றது. மிகப்பெரிய சர்ச்சைக்கு பிறகு மன்சூர் அலிகான், திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டார். 



இந்த சம்பவம் நடைபெற்று ஒரு சில மாதங்கள் ஆன நிலையில் மீண்டும் நடிகை திரிஷா பற்றி மேலும் ஒரு அவதூறான விஷயத்தை சோசியல் மீடியாவில் பேசி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார் முன்னாள் அதிமுக நிர்வாகி ஏ.வி.ராஜூ. அருவருக்கத்தக்க வகையில் கேவலமாக அவர் பேசியதற்கு கடும் அதிர்வலைகளும் கண்டங்களும் எழுந்துள்ளன. 


 



இந்நிலையில் நடிகை திரிஷா பற்றி தரக்குறைவான கருத்துகளை பேசிய அரசியல் பிரமுகரை எதிர்த்து தமிழ் சினிமா கலைஞர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இயக்குநர் மற்றும் நடிகருமான சேரன் தன்னுடைய எக்ஸ் தள பக்கம் மூலம் "இதை வன்மையாக கண்டிக்கிறேன். எந்த ஒரு ஆதாரமும் இன்றி பொது வெளியில் திரைத்துறையினர் பெயரை சொல்லி அவதூறு கிளப்பியதற்கு அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என பதிவிட்டு இருந்தார். 


ஏ.ஜி.எஸ் தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான அர்ச்சனா கல்பாத்தியின் டீவீட்டில் "சமத்துவத்தை நோக்கி கடுமையாக பயணித்து வரும் இந்த காலத்தில் ஒரு சில ஆண்கள் இது போல நடந்து கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தீவிர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்".


திரிஷாவுக்கு ஆதரவு தெரிவித்த நடிகர் மன்சூர் அலிகான் பேசுகையில் "அரசியல் போர்வையில் ஒருவர் விமர்சித்துள்ளார். போகிற போக்கில் நடிகைகளை கீழ்த்தரமாக பேசியது கண்டனத்திற்குரியது; நடிகைகள் குறித்து அவதூறு பேசியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிட்டு இருந்தார். 


நடிகர் திரிஷா, கருணாஸ் மற்றும் பொதுவாக நடிகைகள் மீது ஏ.வி. ராஜு கூறிய அதிர்ச்சியான அவதூறு கருத்துக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நடிகை கஸ்தூரி தனது ஆதரவை தெரிவித்து இருந்தார். 


நடிகர் விஷால், கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட பலரும் திரிஷாவுக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பும் அவதூறு பரப்பியவருக்கு அறிக்கை மூலம் கண்டனம் தெரிவித்துள்ளது. 


மேலும் சோசியல் மீடியாவில் திரிஷாவுக்கு ஆதரவு பெருகி வருகிறது. பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கண்டிக்கப்பட வேண்டும் என குரல் எழுப்பி வருகிறார்கள்.