நாங்குநேரி சம்பவம் தொடர்பாக அரசியல் கட்சியின், திரைத்துறையினர் ஆகியோர் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் தெருக்குரல் அறிவு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது..
”சாதியற்ற வருங்காலத்தை உருவாக்க வகுப்பறைகளில் சாதியத்தின் சமூக விளைவை பாடமாக சொல்லி கொடுங்க. இட ஒதுக்கீடு ஒரு இலவசம்,, ஆண்ட பெருமைகள் சாதி அடையாள கயிறுகள் போன்ற தவறான புரிதல்களை அரும்பிலேயே கிள்ளி எறிவதே கல்வியின் நோக்கமாக இருக்கணும். சாதியை ஒரு ஆபத்தில்லாத பண்பாட்டு வடிவம் என்று இருந்தும் இல்லாத ஒன்று என கடந்து போவது மேலும் ஆபத்தை விளைவிக்கும். சக மாணவன் படிப்பதையும், சுய முன்னேற்றம் அடைவதையும் கூட ஏற்க முடியாத மனநோயின் வேரை கண்டறிந்து வீழ்த்தாமல், தண்டனைகளும், கண்டனங்களும் மட்டும் பட்டியலினத்தவர் மீதான வெறுப்பு மனநிலையை மாற்றாது”. இவ்வாறு அறிவு தெரிவித்துள்ளார்.
நடிகர் ராஜ்கிரன் தெரிவித்துள்ளதாவது: நான் பள்ளியில் படித்த காலங்களில் யாரும் எவ்வித பேதமும் பார்த்ததில்லை. இன்று மாணவர்கள் மற்றும் சமூக சூழலை நினைத்து மனம் பதறுகிறது. இப்படியான சூழல் எப்படி உருவானது? அந்தக்காலம் போல் இந்தக்காலமும் மாறிவிடாதா இறைவா என ஆதங்கப்பட மட்டுமே முடிகிறது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது கண்டனப்பதிவில், கொடூரமான, வெட்கக்கேடான, பரிதாபமான சாதி வெறியர்கள் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இயக்குனர் சமுத்திரகனி, “சாதி வெறி மண்ணோடு மண்ணாகட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.
நாங்குநேரியில் சாதிரீதியான விரோதம் காரணமாக பிளஸ் 2 மாணவர் மற்றும் அவரது தங்கை ஆகியோர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. படுகாயம் அடைந்த இருவரும் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த தாக்குதல் தொடர்பாக 17 வயதுடைய பிளஸ்-2 வகுப்பு மாணவர்கள் 4 பேர் மற்றும் 2 சிறார் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
“சில நாட்களுக்கு முன், திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் பள்ளி மாணவர் மற்றும் அவரது குடும்பத்தினர், சக மாணவர்களால் மிகக் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் தமிழக மக்கள் அனைவரையும் மிகவும் அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளாக்கியது. சாதி, மத, பேதங்களைக் கடந்து மனிதநேயத்துடன் ஒரு சமுதாயத்தைப் படைத்து, அனைத்துத் தரப்பு மக்களும் சமூகப் பொருளாதார வளர்ச்சி பெற வேண்டுமென்ற நோக்கில் இந்த அரசு செயலாற்றி வருவதை மக்கள் அறிவார்கள்.
இளைய சமுதாயத்தினரிடையே சாதி, இன உணர்வு பரவியிருப்பது எதிர்காலத் தமிழகத்தின் நலனுக்கு உகந்ததல்ல. இது உடனடியாக சரி செய்யப்பட வேண்டிய ஒரு முக்கியமானப் பிரச்சினை என்பதால், இதில், அரசு எந்த வகையான நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது குறித்தும், பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இனப் பிரிவினைகள் இல்லாத ஒரு சூழ்நிலையை உருவாக்கிட மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிட ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைத்திட உத்தரவிட்டுள்ளேன்”