கொட்டுக்காளி குறித்து அமீர் கருத்து
சூரி, அனா பென் நடித்த கொட்டுக்காளி படம் கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கூழாங்கல் படத்தின் மூலம் ஒட்டுமொத்த உலக திரைப்பட ரசிகர்களையே திரும்பி பார்க்க வைத்த பி.எஸ் வினோத்ராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயனின் எஸ்.கே ப்ரோடக்ஷன்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுக்களையும் விருதுகளையும் பெற்ற கொட்டுக்காளி படம் தமிழ் வெகுஜன ரசிகர்களிடம் நேர்மாறான விமர்சனங்களைப் பெற்றது. படத்தில் இசை இல்லை. சுவாரஸ்யமாக ஏதும் இல்லை என பலவிதமான கருத்துக்கள் முன்வைக்கப் பட்டன.
சூரி நடித்த முந்தைய படங்களான விடுதலை மற்றும் கருடன் ஆகிய படங்கள் ஏற்படுத்தியிருந்த எதிர்பார்ப்பில் படம் பார்க்க வந்த ரசிகர்கள் தங்கள் எதிர்பார்த்த படமாக கொட்டுக்காளி இல்லாதது குறித்து தங்கள் ஆதங்கத்தை கொட்டி தீர்த்து வருகிறார்கள். இந்த ஆதங்கத்தை அதிகப்படுத்தும் வகையில் அமைந்தது இயக்குநர் அமீரின் சமீபத்திய பேச்சு. வாழை படம் வெகுஜன சினிமாவிற்கு பக்கத்தில் இருப்பதாகவும் ஆனால் கொட்டுக்காளி படம் ஃபெஸ்டிவலுக்காக உருவான படம் என்றும் அந்த படத்தை வெகுஜன சினிமாவுடன் போட்டிபோட வைப்பது அந்த படத்திற்கே செய்யும் வன்முறை என்று அவர் கருத்து தெரிவித்திருந்தார். மேலும் சூரி அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்து வரும் இப்படியான சூழலில் இந்த மாதிரியான படத்தை வெளியிடுவது சூரிக்கு சிவகார்த்திகேயன் செய்யும் துரோகம் என அவர் தெரிவித்திருந்தார்.
அமீரை வெளுத்து வாங்கும் சினிமா ஆர்வலர்கள்
அமீரின் இந்த கருத்து சினிமா ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. பல தரப்புகளில் இருந்து அமீரின் கருத்துக்களை விமர்சித்து வருகிறார்கள். நகைச்சுவை நடிகராக இருந்து நாயகனாக அறிமுகமாகி இருப்பவர் சூரி. வழக்கமான கமர்ஷியன் நடிகர்களைப் போல் இல்லாமல் அவராவது கொஞ்சம் நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். கமர்ஷியல் படங்களைப் பார்த்து பார்த்து பழகிப்போன வெகுஜனத்திற்கு கொட்டுக்காளி மாதிரியான ஒரு படத்தை ஏற்றக்கொள்ள முடியாமல் போவது இயல்புதான். அதற்காக அதை திரையரங்கில் வெளியிடவே கூடாது என்று சொல்வதற்கு அமீர் யார் ? என சினிமா ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்
மேலும் கொட்டுக்காளி எந்த மாதிரியான படம் என படக்குழு தெளிவாக முன்பே தெரிவித்துவிட்டார்கள். இந்த படத்தைப் பார்த்து ரசிகர்கள் வியந்து போவார்கள், இது ஆயிரம் கோடி வசூலிக்கும் , இதில் ஆக்ஷன் காட்சிகள் இருக்கு என பொய் எதுவும் படக்குழு சொல்லாமல் இது மாறுபட்ட ஒரு படம் தான் என்று சொல்லி தான் படத்தை வெளியிட்டிருக்கிறார்கள். இந்த படத்தை திரைப்பட விழாக்களில் மட்டுமே வெளியிட்டு அதை நீங்கள் மட்டுமே பார்த்து உங்களுக்குக்கு இடையில் மட்டும் பேசிக்கொண்டே இருக்கவேண்டும் வெகு ஜனத்தில் இருக்கும் நாங்கள் எல்லாம் இன்னும் பாலச்சந்தர் படங்களை மட்டுமே பேச வேண்டுமா " என ஊடகவியளாலர் விஷன் கேள்வி எழுப்பியுள்ளார்