இந்தியாவின் டான்ஸ் ஐகானான சூப்பர் ஸ்டார் ஹிருத்திக் ரோஷனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புதிய பாடல் அவரது வரவிருக்கும் படமான 'ஃபைட்டர்' படத்தில் இருந்து தற்போது வெளியிடப்பட்டது. 'ஷேர் குல் கயே' (Sher Khul Gaye) என்ற இந்த பாடல் கேட்டவுடனேயே நம்மை ஆர்ப்பரிக்க செய்கிறது.  இந்த பாடலுக்கு ஹிருத்திக் ரோஷனைத் தவிர வேறு யாரும் ஆட முடியாது என்று சொல்லும் அளவிற்கு சிறப்பாக நடனமாடி உள்ளார்.  மேலும் அவருக்கென்ற அடையாளமாக மாறும் கடினமாக டான்ஸ் மூவ்ஸ்களை எளிமையாக மாற்றுகிறார்.  


அவரது ஈடு இணையற்ற நடனத் திறமைக்காகப் புகழ் பெற்ற ஹிருத்திக் ரோஷன், 'ஷேர் குல் கயே' பாடலின் மூலம் மீண்டும் தனது திறமையை வெளிக்காட்டி உள்ளார்.  'கஹோ நா பியார் ஹை' படத்தில் வரும் 'ஏக் பால் கா ஜீனா' முதல் 'கபி குஷி கபி காம்' படத்தில் உள்ள 'யூ ஆர் மை சோனியா' மற்றும் 'தூம் 2'ல் இருந்து ஆற்றல்மிக்க 'தூம் அகெய்ன்' வரை, ஹிருத்திக் தொடர்ந்து பல ஆண்டுகளாக ஹிட் பாடல்களை ரசிகர்களுக்கு வழங்கியுள்ளார்.  'பேங் பேங்' டைட்டில் டிராக் மற்றும் 'வார்' படத்தின் 'குங்ரூ' போன்ற சமீபத்திய வெற்றிகள் இந்திய சினிமாவின் சிறந்த நடனக் கலைஞர்களில் ஒருவராக அவரது நிலையை உறுதிப்படுத்தியதை மறந்துவிடக் கூடாது.


வரவிருக்கும் விடுமுறை சீசனின் முன்னோடியாக, ஹிருத்திக் ரோஷன் 'ஃபைட்டர்' படத்தில் ஆக்‌ஷன் மற்றும் நடனத்தின் சரியான கலவையுடன் ரசிகர்களுக்கு விருந்தளித்துள்ளார். 'பேங் பேங்' (2014) மற்றும் 'வார்' (2019) ஆகிய வெற்றிகரமான கூட்டணிக்கு பிறகு சித்தார்த் ஆனந்த் இயக்கி இருக்கும் இந்த படம், அவர்களின் மூன்றாவது கூட்டணி ஆகும். ஃபைட்டர் படத்தில் ரித்திக் ரோஷன் ஷம்ஷேர் பதானியா என்ற போர் விமான பைலட் ஆக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் தீபிகா படுகோன் மற்றும் அனில் கபூர் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்களும் உள்ளனர்.


'ஃபைட்டர்' படத்தின் டீஸர் ஏற்கனவே வெளியாகி உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இப்போது, ​​'ஷேர் குல் கயே' பாடல் வெளியாகி மீண்டும் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. திரையரங்கில் ஹிருத்திக் ரோஷனின் நடன அசைவுகளைக் காண ரசிகர்கள் காத்து கொண்டுள்ளனர்.  இந்தியாவின் 75வது குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 25, 2024 அன்று திரையரங்குகளில் 'ஃபைட்டர்' வெளியாக உள்ளது.  இந்த படம் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  ஹிருத்திக் ரோஷனின் கவர்ச்சி, திறமை மற்றும் இணையற்ற நட்சத்திர சக்தி ஆகியவற்றின் பிளாக்பஸ்டர் காட்சியாக இந்த படம் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.