தமிழ் சினிமாவில் பெண் வில்லன் கதாபாத்திரங்களுக்கு எப்போதும் ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. நடிகையர் கடந்த காலத்தில் வெளியானப் படங்களில் தங்களது நடிப்பால் அனைவரது மனதிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதே இதற்கு முக்கியக் காரணம்.தமிழ் சினிமாவில் பெண்கள் வில்லிகளாக நடித்து கலக்கிய சில கேரக்டர்களைப் பார்க்கலாம்.
நீலாம்பரி (படையப்பா)
பெண் வில்லன் கதாபாத்திரம் என்றால் அதில் நீலாம்பரி இடம்பெறாமல் இருக்க முடியாது. மிடுக்கான, கெத்தான் ஒரு பெண் நீலாம்பரி. படையப்பா மாதிரியான ஒரு ஆணிடம் ஈர்க்கப்படுகிறார். அவரை அடைய முடியாத கோபத்தில் 18 ஆண்டுகள் ஒரே அறையில் கழிக்கிறார். எதிரியான படையப்பா தன் உயிரை காப்பாற்றிய ஒரே காரணத்திற்காக தன் உயிரைத்தானே எடுத்துக்கொள்கிறார்.
ஈஸ்வரி (திமிரு)
கிட்டதட்ட நாம் அனைவரும் பார்த்து மிரண்டுபோன ஒரு கதாபாத்திரம் என்றால் அது திமிரு படத்தில் ஈஸ்வரியின் கதாபாத்திரம். கட்டபஞ்சாயத்து செய்யும் மதுரைப் பெண்ணாக ஈஸ்வரியின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கும். கடனை திருப்பிக் கொடுக்காத ஆண்களை நடுரோட்டில் இழுத்து போட்டு அவமானப் படுத்துவார் ஈஸ்வரி. இந்த மாதிரியான ஒரு பெண் ஒருவனிடம் காதல் கொண்டால் அவள் அவனை அடைவதற்கு எந்த மாதிரியான அணுகுமுறையை கையாள்வாள் என்று காட்டப்பட்டிருக்கும். திமிரு என்று படத்தின் பெயர் ஈஸ்வரியின் கதாபாத்திரத்தோடு மிகச் சரியாகப் பொருந்திப்போகக் கூடியதாக இருக்கும்.
கீதா (வல்லவன்)
தன்னை காதலிப்பதாக ஒருவன் தன் பின்னால் அலைகிறான் என்றபின் அவனை எந்த மாதிரி எல்லாம் சோதிக்க முடியுமோ அத்தனை வகைகளிலும் சோதிக்கக் கூடிய ஒரு கதாபாத்திரம் தான் கீதா. ஆனால் எங்கு இந்த கவனம் ஒரு கட்டத்திற்குமேல் கிடைக்காமல் போய்விடுமோ என்கிற பயத்தில் கீதா வல்லவனை சந்தேகப்படத் தொடங்குகிறார். ஒவ்வொரு முறையும் அவனை தனது காதலை நிரூபித்துக் காட்டச் சொல்கிறார். தன்னை நிராகரித்து விட்டுச் செல்லும் ஒருவனை பழிவாங்கத் துடிக்கிறார். இந்த கதாபாத்திரத்தை கண்முன் நிறுத்தியிருப்பார் ரீமா சென்
அனிதா பாண்டியன் (ஆயிரத்தில் ஒருவன்)
ரீமா சென் வில்லன் கதாபாத்திரத்தில் அசாத்தியமான நடிப்பாற்றலை வெளிப்படுத்தக் கூடியவர்.பாண்டிய வம்சத்தைச் சேர்ந்த அனிதா பாண்டியன். சோழர்களை கண்டுபிடித்து அவர்களை அழிக்க துடிக்கும் ஒரு கதாபாத்திரம்.
ருத்ரா (கொடி)
த்ரிஷா நடித்த ருத்ரா கதாபாத்திரம் அரசியல் ஆர்வம் கொண்ட ஒரு பெண். அரசியல் என்றால் பொதுவாக ஆண்கள் அதிகம் இருக்கும் ஒரு சூழலில் எப்படியாவது பதவிக்கு செல்ல வேண்டும் என்கிற கனவை தூக்கி சுமப்பவர். இதற்காக தனது காதலனான கொடியை கொலை செய்கிறார். குற்றவுணர்வு அவர் மனதில் இருந்தாலும் தனது லட்சியத்தை யாருக்காகவும் விட்டுகொடுக்க தயாராக இல்லாத உணர்வை வெளிப்படுத்தியிருப்பார்