நடிகர் அஜித்குமார் தொடர்ச்சியாக ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடத்தி வருவதால் இங்கு இருக்கும் பெப்சி தொழிலாளர்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுவதாக ஆர். கே. செல்வமணி குற்றம்சாட்டியுள்ளார்.


தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர்  ஆர்.கே.செல்வமணி  இன்று காலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, மே 8ம் தேதி நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெறும். அதனால் அன்றைய தினம் திரைப்பட படப்பிடிப்புகள் நடைபெறாது என்று அறிவித்தார். மேலும், தயாரிப்பாளர்கள் மற்றும் திரைப்படத் தொழிலாளர்கள் இடையிலான மோதல் போக்கு குறித்து பேசிய அவர், தயாரிப்பாளர்களுடன் நட்பாகவும் பணிவாகவும் போவதால் எந்த நஷ்டமும் இல்லை. நாங்கள் வலிமையாக இருக்கிறோம் என்பதால் அவர்களை அவமானப்படுத்துவதை விரும்பவில்லை. நாங்கள் ஒரே துறையில் இருக்கிறோம். நாளை அவர்களுடன் சேர்ந்து பணிபுரியவேண்டும். அவர்களிடம் எங்கள் வலிமையை காட்டுவதில் எந்தவித லாபமும் இல்லை. எங்களுடைய ஈகோ வேண்டுமானால் சேட்டிஸ்ஃபை ஆகும். நாங்கள் இல்லாமல் நீங்கள் வேலை செய்யமுடியாது என்று சொல்லலாம். ஆனால் இதனால் நட்பில் விரிசல் அதிகமாகும் என்று கூறிய அவர், நான் வலிமையானவன் என்று சொல்லிக்கொள்வதில் என்ன லாபம் இருக்கிறது? என்று கேள்வியெழுப்பினார்.


தமிழ்நாட்டில் படப்பிடிப்புகளை நடத்தாமல், ஐதராபாத்தில் தொடர்ச்சியாக தமிழ் திரைப்பட படப்பிடிப்புகள் நடைபெறுவது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ஆர்.கே.செல்வமணி, எங்களுக்கு ஒன்று கேட்கத் தெரியும். இல்லை சண்டைப் போடத் தெரியும். சண்டை போடும் விஷயத்திற்குள் போகவேண்டாம் என்று நினைக்கிறோம். இங்கே வருமானம் பார்த்து வேறு மாநிலத்தில் செலவு செய்வதில் எந்த லாபமும் இல்லை. படத்திற்கு தேவைப்படும் பட்சத்தில் வெளிமாநிலங்களுக்குச் செல்வதில் தவறில்லை. ஆனால், சென்னை மவுண்ட்ரோட்டை, ஹைகோர்ட்டை ஐதராபாத்தில் செட் போட்டு ஷூட் செய்கிறார்கள். இங்கிருக்கும் ஆயிரக்கணக்கானத் தொழிலாளர்கள் வயிற்றில் மண்ணை அள்ளிப்போட்டுவிட்டு அங்கு போய் ஷுட் செய்வதில் என்ன ஈகோ சேட்டிஸ்ஃபை ஆகிறது என்று தெரியவில்லை என்று வேதனை தெரிவித்தார்.




மேலும், இது தொடர்பாக நடிகர் விஜயிடம் ஒரு வேண்டுகோள் வைத்தோம். உடனடியாக இதன் மீது அவர் நடவடிக்கை எடுத்திருக்கிறார். இதுவரை தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநர்களுக்கும் தான் வேண்டுகோள் வைத்திருந்தோம். இப்போது நடிகர் அஜித்துக்கு நேரடியாகவே வேண்டுகோள் வைக்கிறோம். நீங்கள் ஹைதராபாத்தில் படப்பிடிப்பை தொடர்ந்து நடத்துவதால் தமிழ்நாட்டில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. இவர்களை நஷ்டப்படுத்துவதால் உங்களுக்கு கெட்ட பெயர் ஏற்படும். வருங்காலத்திலும், நிகழ்காலத்திலும் இதை தவிர்க்கவேண்டும் என்று நேரடியான வேண்டுகோளாகவே வைக்கிறேன் என்று கூறினார்.


அதோடு, இங்கு தான் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வியாபாரத்தையோ, கலைநுணுக்கத்தையோ, தேவைப்படும் காட்சிகளை கெடுக்க நாங்கள் தயாராக இல்லை. ஆனால் தொடர்ச்சியாக இங்கிருக்கும் இடங்களை அங்கு செட் போட்டு, அங்கிருப்பவர்களை வேட்டி கட்ட விட்டு தமிழர்களாக சித்தரிக்க வேண்டிய அவசியம் இல்லை.  அதற்கு இங்கேயே ஆள்கள் இருக்கிறார்கள். செட் போடுவதற்கு என்று மதில் சுவர்களுடன் 15 ஏக்கரில் இங்கு இடம் இருக்கிறது. அதனால் இங்கு இடம் இல்லை என்ற காரணத்தை சொல்லவேண்டாம் என்று கூறிய அவர், தயாரிப்பாளர்களுக்கு வெளிமாநிலங்களில் படப்பிடிப்பு நடத்துவதால் நஷ்டம்தானே தவிர லாபமில்லை. இதற்கு காரணம் நடிகரும், இயக்குநரும் தானே தவிர தயாரிப்பாளர் இல்லை என்றார்.




 
நடிகர் அஜித், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோருக்கு எங்கள் நேரடியான வேண்டுகோள். நீங்கள் அங்கு சென்று படப்பிடிப்பு நடத்துவதால், எங்கள் தொழிலாளர்களுக்கு தொழில்நஷ்டம் ஏற்படுகிறது. எங்களுடைய வேண்டுகோளை நீங்கள் ஏற்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என்று ஆர்.கே.செல்வமணி செய்தியாளர்கள் சந்திப்பின்போது வலியுறுத்தி கேட்டுக்கொண்டார்.