நடிகர்கள் ஸ்ரீநாத் பாசி, ஷேன் நிகாம் ஆகியோருக்கு மலையாள திரைப்பட உலகம் தடை விதித்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மலையாள நடிகர்:
தரமான சினிமாக்களை தொடர்ந்து வழங்கி வரும் மலையாள சினிமாவுக்கென உலகமெங்கும் தனி ரசிகர் கூட்டம் உள்ளது. ஆனால் அங்கு இரு நடிகர்களுக்கு நடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பல மலையாள படங்களில் சிறிய வேடங்களில் நடித்து வந்த ஷேன் நிகம், 2013 ஆம் ஆண்டு வெளியான வெளியான நீலகாஷம் பச்சைக்கடல் சுவாச பூமி என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து கிஸ்மத் (2016), பரவா, கும்பலாங்கி நைட்ஸ் (2019) மற்றும் இஷ்க் போன்ற படங்களில் நடித்தார்.
தடை விதித்த நடிகர் சங்கம்:
அதேசமயம் 2017 ஆம் ஆண்டு வெளியாகிய C/O சைரா பானு படத்தில் அமலா மற்றும் மஞ்சு வாரியருடன் நடித்த ஷேன் நிகம் சிறந்த நடிப்புக்காக பாராட்டைப் பெற்றார். இவர் நடிப்பில் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி பிரியதர்ஷன் இயக்கிய கொரோனா பேப்பர்ஸ் படம் வெளியானது. இதில் சக நடிகர் ஷைன் டாம் சாக்கோ மற்றும் ஜீன் லால் ஆகியோருடன் இணைந்து நடித்திருந்தார். ஆக்ஷன் த்ரில்லர் கதையம்சம் கொண்ட இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இப்படியான நிலையில் திரைப்பட தொழிலாளர்கள் சங்கம் மற்றும் மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கம் (அம்மா), தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் நடிகர்கள் ஷேன் நிகம் மற்றும் ஸ்ரீநாத் பாசி ஆகியோருக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டது. இனி இருவரின் படங்களுக்கும் ஒத்துழைக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைக்கு அடிமை:
இதுதொடர்பாக தயாரிப்பாளர் ரஞ்சித் பத்திரிகையாளர் சந்தித்தார். அப்போது, “போதைக்கு அடிமையான கலைஞர்களுக்கு சங்கம் ஒருபோதும் ஒத்துழைக்காது என்றும், ஷேன் நிகாம் மற்றும் ஸ்ரீநாத் பாசி இருவரும் அடிக்கடி சுயநினைவின்றி நடந்து கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இருவரும் ஷூட்டிங்கில் போதையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது சக நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு பிரச்சினையை ஏற்படுத்துகிறது” என தெரிவித்திருந்தார்.
திரையுலக தடையால் ஷேன் நிகம் ஒப்பந்தமாகியுள்ள . பெர்முடா, குபானி, கல்ப், பைங்கிலி, பராக்கிரமம் மற்றும் ஆயிரத்தோன்னம் ரவு ஆகிய படங்களின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேசமயம் ஸ்ரீநாத் பாசி வேண்டுமென்றே பல படங்களுக்கு ஒரே தேதிகளைக் கொடுத்ததாகவும், இதனால் தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. மேலும் போதைக்கு அடிமையான நடிகர்களின் பட்டியலை மாநில அரசிடம் சமர்ப்பிக்கப் போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.