கேரள மாநிலம் கொல்லம் சாஸ்தாங்கோட்டை பகுதியில் வசித்த விஸ்மயா என்ற இளம்பெண் , வரதட்சணை கொடுமை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கியது. உயிரிழந்த  இளம்பெண்ணின் இறுதி  வாட்ஸப் பதிவுகள் தீயாய் பரவின. இந்த சம்பவத்திற்கு பிறகு கேராளாவில் பல வரதட்சணை கொடுமைகளும், அதன் பின் நடக்கும் வன்முறைகளும் வெளிச்சத்திற்கு வர தொடங்கின. இது குறித்து கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் “நாட்டில் வரதட்சணை தடை செய்யப்பட்டு 60 ஆண்டுகள் ஆன நிலையில் பல விதங்களில்  அதிக வரதட்சணை கொடுப்பதும், வாங்குவதும்  அரங்கேறிக்கொண்டுதான் இருக்கிறது. திருமணம் என்பது குடும்ப கௌரவத்தையும் காட்டுவதற்கான நிகழ்வு அல்ல.  திருமணத்தை வியாபார ஒப்பந்தமாக்க கூடாது, அப்படி செய்தால் உங்கள் பிள்ளைகளை நீங்களே விற்பனை செய்வது போன்றது “ என காட்டமாக தெரிவித்தார். 





இந்நிலையில் கேரள திரைப்பட ஊழியர் கூட்டமைப்பு ( The Film Employees Federation of Kerala) விழிப்புணர்வு குறும்படங்களை  வெளியிட்டு வருகிறது. அதன்படி முதலில் வெளியிடப்பட்ட குறும்படத்தில்  பாபநாசம் படத்தில் நடித்திருந்த  எஸ்தர் அனில் நடித்துள்ளார் . பக்கத்து வீட்டுக்காரர் தனது மனைவியை அடித்து கொடுமை படுத்தும் பொழுது, எஸ்தரின் தந்தை கதவுகளை அடைத்துவிட்டு கடந்து போகிறார். ஆனால் அதனை  தாங்கிக்கொள்ள முடியாதா எஸ்தர் பக்கத்து வீட்டுக்காரரை போனில் தொடர்புக்கொண்டு “ அண்ணா வேண்டாம் , தண்டனை கிடைக்கும்” என கூறுகிறார். இப்படியாக முடியும் அந்த வீடியோவின் முடிவில் நடிகை மஞ்சு வாரியர் தோன்றி “  ஆம் தண்டனை கிடைக்கும். இது பழைய கேரளா இல்லை. பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை மற்றும் வரதட்சணை கொடுப்பதும் வாங்குவதும் சட்டப்படி குற்றம். இதனால் பிரச்சனைக்குள்ளாகும் எந்த ஒரு பெண்ணும் தனியாக இல்லை, அவர்களுக்கு பின்னால் ஒரு சமுதாயமே இருக்கிறது “ என தெரிவித்துள்ளார். 



இதே போல சமீபத்தில் வெளியாகியுள்ள மற்றொரு வீடியோவில் வெற்றிவேல் படத்தின் நாயகி நிஹிலா விமல் நடித்துள்ளார். அதில்   பெண் பார்க்க வந்திருக்கும் மாப்பிள்ளை வீட்டார்  ”பையன் என்ன வேலை பாக்குறானு தெரியும்ல , அவனுக்கு(வரதட்சணை) என்ன கிடைக்கும் என கேட்க, மாப்பிள்ளைக்கு தேனீர் கொடுக்கும் நிஹிலா விமல் “ தண்டனை கிடைக்கும்” என பதிலளிக்கிறார். அந்த வீடிவோவின் இறுதியில் நடிகர் பிருத்திவிராஜ் தோன்றி  வரதட்சணை குறித்து மஞ்சு வாரியர் கூறிய அதே விழிப்புணர்வு வசனங்களை கூறுகிறார்.






 கேரள திரைப்பட ஊழியர் கூட்டமைப்பு ஊழியர்கள் மற்றும் சில விளம்பர நிறுவனங்கள் இணைந்து இது போன்ற  குறும்படங்களை தயாரித்து வருகின்றனர். முன்னதாக கொரோனா  குறித்த விழிப்புணர்வு குறும்படங்களையும் தயாரித்து வெளியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.