நடிகர் விஜய்யின் வாரிசு உட்பட பல மொழிகளில் வெளியான திரைப்படங்கள், தொடர்கள் ஓடிடி தளத்தில் ரிலீசாகவுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 


கொரோனா காலக்கட்டத்திற்குப் பின் இந்தியாவில் ஓடிடி தளங்களின் பயன்பாடு அதிகரித்து விட்டது. தியேட்டர்களில் எந்தப்படம் ரிலீஸ் ஆகிறது என்பதைப் போலவே ஒவ்வொரு வாரமும் எந்த படம் ஓடிடி.,யில் ரிலீஸாகிறது என்பதை அறிய பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். இதனை சரியாக கணித்துக் கொண்ட நெட்ஃப்ளிக்ஸ், ஹாட் ஸ்டார், அமேசான் ப்ரைம் போன்ற ஓடிடி தளங்கள் சமீப காலமாக அதிகளவிலான தொடர்கள் மற்றும் படங்களை வெளியிட்டு வருகிறது. 


வாரிசு 


வம்சி பைடிபள்ளி இயக்கிய  வாரிசு படம் கடந்த ஜனவரி 11 ஆம் தேதி வெளியானது. இந்த படத்தில் ஹீரோவாக விஜய்யும், ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனாவும் நடித்திருந்தனர்.  மேலும் சரத்குமார், ஷாம், பிரபு, சங்கீதா, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சம்யுக்தா, பிரபு, பிரகாஷ்ராஜ், எஸ்.ஜே.சூர்யா, யோகிபாபு உள்ளிட்ட பலரும் இணைந்திருந்த நிலையில் தமன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். வசூலில் ரூ.300 கோடியை தொட்ட இப்படம் பிப்ரவரி 22 ஆம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகிறது. 


வீரசிம்ஹா ரெட்டி 


தெலுங்கில் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான படம் வீர சிம்ஹா ரெட்டி. கோபிசந்த் மலினினி இயக்கத்தில் உருவான இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இந்த படத்தில், ஸ்ருதிஹாசன், வரலட்சுமி, ஹனிரோஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். வீரசிம்ஹா ரெட்டி படம் ஜனவரி 12 ஆம் தேதி தியேட்டரில் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றது. இதனிடையே  இப்படம் டிஸ்னி பிளாஸ் ஹாட் ஸ்டாரில் பிப்ரவரி 23 ஆம் தேதி வெளியாகிறது. 


தங்கம் 


திருச்சூரில் தங்க வர்த்தகத்தில் பணிபுரியும் மூன்று நண்பர்களை மையமாக வைத்து மலையாளத்தில் எடுக்கப்பட்ட திரைப்படம் தங்கம். இப்படத்தில் பிஜு மேனன், வினீத் ஸ்ரீனிவாசன், மற்றும் வினீத் தட்டில் டேவிட் ஆகியோர் முதன்மை கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் ஜனவரி 25ந் தேதி திரையரங்கில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம் பிப்ரவரி 22 ஆம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகிறது. 


நண்பகல் நேரத்து மயக்கம் 


மலையாளத்தில் கடந்த மாதம் 19 ஆம்  தேதி லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் மம்முட்டி நடிப்பில் வெளியான  படம் நண்பகல் நேரத்து மயக்கம். இப்படத்தில் ரம்யா பாண்டியன், மறைந்த நடிகர் பூ ராமு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். தமிழ், மலையாளம் என இருமொழிகளில் வெளியான நண்பகல் நேரத்து மயக்கம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இப்படம் நெட்ஃபிளிக்ஸில் பிப்ரவரி 23 ஆம் தேதி வெளியாகிறது. 


We Have a Ghost 


ஹாலிவுட்டில் கிறிஸ்டோபர் லேண்டன் இயக்கத்தில் டேவிட் ஹார்பர், ஜெனிஃபர் கோலிட்ஜ், ஆண்டனி மேக்கே உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் We Have a Ghost.வீட்டுக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் பேயிடம் இருந்து ஒரு குடும்பம் எப்படி தப்பிக்கிறது என்பதே இதன் கதையாகும். பிப்ரவரி 24 ஆம் தேதி நெட்பிளிக்ஸில் இப்படம் வெளியாகிறது. 


அதுமட்டுமல்லாமல் டிஸ்னி ஹாட் ஸ்டாரில்,  ஆதித்யா ராய் கபூர் நடித்த தி நைட் மேனேஜர், ஹன்சிகாவின் கல்யாண சீரிஸான லவ் ஷாதி டிராமா ஆகிய தொடர்களும் ஒளிபரப்பாகிறது. மேலும் ஆபரேஷன் ஃபைனல் (நெட்பிளிக்ஸ்), கால் இட் லவ் (ஹாட் ஸ்டார்), ஸ்னோஃபால் சீசன் 6 (ஹாட் ஸ்டார்), தி கன்சல்டண்ட் (அமேசான்) என படங்களும், தொடர்களும் ஓடிடி தளத்தில் ரிலீசாகிறது.