அமைச்சர் உதயநிதிக்கு ஒரு செங்கலை பார்சல் அனுப்ப போகிறேன் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 


கடந்த ஜனவரி மாதம் 4ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியின் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா உடல் நலக்குறைவால் காலமானார். இதனால் அந்த தொகுதியில் பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக கூட்டணி சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனும், அதிமுக சார்பில் அந்த தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. தென்னரசுவும், தமிழர் கட்சி சார்பாக மேனகா, தேமுதிக கட்சி சார்பாக ஆனந்தும் போட்டியிடுகின்றனர்.


இந்த தொகுதியில் மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில், ஒவ்வொரு அரசியல் கட்சிகள் போட்டிப்போட்டுக் கொண்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்த சூழலில் அதிமுக வேட்பாளர் தென்னரசை ஆதரித்து தற்போது தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்று அண்ணாமலை பிரச்சாரத்தின்போது, “30 திமுக அமைச்சர்களை எதிர்த்து நம் அனைவரும் தேர்தல் களத்தில் பணியாற்றி வருகிறோம். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவை இந்த தமிழ்நாடே எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறது. அதிமுக வேட்பாளர்களை பொதுமக்கள் சந்திக்க கூடாது என்பதற்காக, திமுக காரர்கள் மக்களை அடைத்து வைத்துள்ளார்கள். சீப்பை மறைத்து வைத்துவிட்டால் கல்யாணம் நின்றுபோய்விடும் என்று பழமொழி சொல்வார்கள். அதேபோல், வாக்காளர்களை ஒழித்து வைப்பதால் அதிமுக- பாஜக கூட்டணி வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. திமுக இதுவரை தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஒவ்வொரு குடும்ப அட்டைக்கு ரூ. 1000 கொடுத்திருந்தால், குடும்ப தலைவிகளுக்கு தற்போது ரூ.22 ஆயிரம் கொடுத்திருக்க வேண்டும். இப்போதுவரை திமுக ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை, கேஸ் சிலிண்டர் மானியம் இதுவரை அளிக்கப்படவில்லை.


மதுரையில் எய்ம்ஸ் கட்ட கொடுக்கப்பட்ட செங்கலை அமைச்சர் உதயநிதி எடுத்துக்கொண்டு சுற்றுகிறார். இந்தியாவிலேயே எங்கும் இல்லாத அளவிற்கு இதுபோல் 1 லட்சத்திற்கு மேலான செங்கலை கொண்டுதான் பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாட்டில் 11 மருத்துவ கல்லூரிகளை கட்டி கொடுத்துள்ளார். 11 மருத்துவ கல்லூரிகளும் தந்த ஆட்சி நம் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி. இந்த செங்கலை அமைச்சர் உதயநிதிக்கு பார்சல் அனுப்ப போகிறேன். திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் தங்களது கட்சிகளை அடமானம் வைத்துவிட்டார்கள். மக்களிடம் ஓட்டு கேட்பதற்கு முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கோ, உதயநிதி ஸ்டாலினுக்கோ, கனிமொழிக்கோ எந்த தகுதியும் இல்லை. திமுக ஆட்சிக்கு வந்து 22 மாதம் ஆகிறது. இந்த 22 மாதமும் தமிழ்நாட்டிற்கு இருண்ட காலம்தான். இந்த விடியா ஆட்சியில் காவல்துறை அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை. திமுகவின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற அதிமுக வெற்றிபெற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.