பிரேமம் படத்தின் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரனின் தற்போதைய புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், படத்தொகுப்பாளர் என பன்முக திறமை கொண்டவர்களில் ஒருவரான கேரளாவைச் சேர்ந்த அல்போன்ஸ் புத்திரன், பல குறும்படங்களை இயக்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு நிவின் பாலி, நஸ்ரியாவை முதன்மை கதாபாத்திரங்களாக கொண்டு ‘நேரம்’ என்ற படத்தை இயக்கியிருந்தார். தமிழ், மலையாளம் என இருமொழிகளில் எடுக்கப்பட்ட இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இதனையடுத்து இரண்டாவதாக அல்போன்ஸ் புத்திரன் எடுத்தப் படம் மலையாள சினிமாவை மட்டுமல்ல, தமிழ் சினிமா ரசிகர்களையும் கொண்டாட வைத்தது. நிவின் பாலி ஹீரோவாக நடிக்க அனுபமா பரமேஸ்வரன், சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன் என 3 ஹீரோயின்களை கொண்டு ‘பிரேமம்’ என்ற படத்தை எடுத்திருந்தார். இது தமிழ் சினிமாவில் பார்த்து பழகிய கதைதான் என்றாலும், திரைக்கதையில் காட்டியிருந்த மேஜிக்கால் இன்றளவும் கொண்டாடக்கூடிய படங்களில் ஒன்றாக உள்ளது.
குறிப்பாக சாய் பல்லவியின் மலர் டீச்சர் கேரக்டரை மறக்கவே முடியாது. இதனைத் தொடர்ந்து 7 ஆண்டுகளாக படம் எதுவும் இயக்காமல் இருந்து வந்த அல்போன்ஸ் புத்திரன் 2020 ஆம் ஆண்டு திடுக்கிடும் குற்றச்சாட்டை முன்வைத்தார். அதில் தன்னுடைய பெயரில் போலி அழைப்பு மூலம் நடிக்க ஆர்வமுள்ளவர்களின் போட்டோக்களை பெற்று மோசடியில் ஈடுபடுவதாக கூறி போலீசில் புகார் அளித்தார்.
இந்நிலையில் தான் 7 ஆண்டுகள் கழித்து அல்போன்ஸ் புத்திரன் பிரித்விராஜ், நயன்தாரா நடிப்பில் கோல்டு என்ற மலையாளப் படத்தை இயக்கியுள்ளார். செப்டம்பர் மாதமே வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்த இந்த படம் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகளின் தாமதம் காரணமாக டிசம்பர் 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது. சுப்ரியா மேனன் மற்றும் லிஸ்டன்ஸ் ஸ்டீபன் தயாரிப்பில் ராஜேஷ் முருகேசன் இசையமைத்துள்ளார்.
இதற்கிடையில் அல்போன்ஸ் புத்திரனின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது. 38 வயதான அவர் பார்ப்பதற்கு 50 வயது நபர் போல தோற்றமளிப்பதாகவும், அவருக்கு என்ன பிரச்சனை எனவும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கேள்வியெழுப்பியுள்ளனர்.