பிரபல நடிகை மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பல முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை மீனா. கண்ணழகி என்றால் மீனா என்னும் சொல்லும் அளவுக்கு தமிழ் சினிமா ரசிகர்களிடம் மறக்க முடியாத இடத்தை பெற்ற அவர் கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி பெங்களூரைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரான வித்யாசாகரை திருமணம் செய்துக் கொண்டார்.
இந்த தம்பதியினருக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். இவரும் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளனர். 12 ஆண்டுகள் சந்தோஷமாக சென்ற இவர்களது மண வாழ்வில் இந்தாண்டு பெரும் துயரம் நடந்தது. நுரையீரல் பாதிப்பு காரணமாக தீவிர சிகிச்சைப் பெற்று வந்த வித்யாசாகர் கடந்த ஜூன் 28 ஆம் தேதி மரணமடைந்தார். அவரின் மறைவு திரையுலகினர், ரசிகர்கள் இடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கணவரின் இறப்புக்கு பிறகு நடிகைகள் சங்கீதா, ரம்பா, சங்கவி, நடன இயக்குநர் கலா மாஸ்டர் ஆகியோர் நேரில் சந்தித்த புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியது.
இதன்பிறகு கணவரின் மறைவால் பொதுநிகழ்வுகளில் பங்கேற்காமல் இருந்த மீனா கடந்த சில மாதங்களாக தன் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளார். இதனை ரசிகர்களும் வரவேற்றனர். இந்நிலையில் யார் சொன்னது பெண்கள் தயாராவதற்கு அதிக நேரம் எடுக்கும் என்ற கேப்ஷனில் மீனா வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
இதில் சாதாரண உடையில் அறைக்குள் வேகமாக சென்று நிகழ்ச்சிக்கு செல்லும் வகையில் சூப்பரான ஆடை உடுத்தி வெளியே வரும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இதனைப் பார்த்த இணையவாசிகள் ஹார்ட் எமோஜிகளை பறக்க விட்டுள்ளதோடு, இப்படிப்பட்ட ஜாலியான மீனாவை தான் நாங்கள் பார்க விரும்புகிறோம் என தெரிவித்துள்ளனர்.