பிரபல நடிகர் ஜாக்கிசான் உடல்நலக்குறைவால் உயிரிழந்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவிய நிலையில் அவரது ரசிகர்கள் கோபமடைந்துள்ளனர். 

Continues below advertisement


ஹாங்காங் நாட்டைச் சேர்ந்த தற்காப்புக்கலை கலைஞரான ஜாக்கிசான் உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களால் மிகப்பெரிய அளவில் அறியப்பட்டவர். நடிகர், இயக்குநர், எழுத்தாளர், தயாரிப்பளர் என பன்முக திறமை கொண்ட அவரின் படங்கள் இன்றளவும் மிகப்பெரிய அளவில் பேசுபொருளாக உள்ளது. அதற்கு காரணம் தற்காப்பு கலை கொண்டு அசாத்தியமான சண்டை காட்சிகளில் ஈடுபட்டு ரசிகர்களை மகிழ்விக்கவும், ஆச்சரியப்படவும் செய்தார். 


திடீரென பரவிய மரண செய்தி


இந்த நிலையில் 71 வயதான ஜாக்கிசான் உடல்நலக்குறைவால் காலமானதாக அவரது குடும்பத்தினர் பதிவிட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்தி ஒன்று உலா வந்தது. இதனைக் கண்ட இணையவாசிகளும், திரையுலகினரும் அதிர்ச்சியடைந்தனர். ஜாக்கிசான் இறந்து விட்டதாக வதந்தி பரவுவது இது முதல்முறை கிடையாது. 2015 ஆம் ஆண்டு அவர் ஒரு விமான பயணத்தில் இருந்தபோது இறந்து விட்டதாக செய்தி வெளியானது. 






 அவர் விமான நிலையத்தில் இருந்து இறங்கியபோது செய்தியாளர்கள் கேட்ட கேள்வியைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். தான் நலமுடன் இருப்பதாகவும் கூறினார். இந்த நிலையில் நவம்பர் 11ம் தேதி பரவிய இந்த தகவலைக் கண்டு பலரும் என்னுடைய இந்த நாளே நாசமாகி விட்டது. ஏன் இப்படி ஒரு அவதூறை பரப்புகின்றனர் என கோபத்துடன் கேள்வி எழுப்பியுள்ளனர். 


ஜாக்கிசானின் திரைப்பயணம்


ஜாக்கிசான் ஐந்து வயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். பின்னர் இளம் வயதில் பல திரைப்படங்களில் ஸ்டண்ட் கலைஞராக நடித்து வந்த நிலையில் ஸ்னேக் இன் தி ஈகிள்ஸ் ஷாடோ என்ற குங்ஃபூ கலையை மையமாக கொண்ட நகைச்சுவை படத்தில் நடித்து 1978 ஆம் ஆண்டு ஹீரோவாக எண்ட்ரீ கொடுத்தார். அதன் பின்னர் டிரங்கன் மாஸ்டர், தி யங் மாஸ்டர், தி ஃபியர்லெஸ் ஹயானா, த்ரீ டிராகன்ஸ், சம்மோ ஹங், போலீஸ் ஸ்டோரி, ரம்பிள் இன் தி பிராங்ஸ், ரஷ் ஹவர், தி பார்பிடன் கிங்க்டம், தி கராத்தே கிட் என ஏகப்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். 


ஜாக்கிசானின் அனைத்து படங்களும் இந்திய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறது.1982 ஆம் ஆண்டு தைவான் நடிகை ஜோன் லினை மணந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.