கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன் உள்ளிட்டோர் நடித்துள்ள 'ஜகமே தந்திரம்' திரைப்டம் நெட்ப்ளிக்ஸில் இன்று மதியம் 12.30 மணிக்கு வெளியாகிறது.
இத்திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிலையன்ஸ் நிறுவனம் வழங்க, ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது.
2016ம் ஆண்டு இந்த படத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டது. முதலில் தேனாண்டாள் நிறுவனம் தான் இந்த படத்தை தயாரிப்பதாக இருந்து நிலையில் சில காரணங்களால் கைவிடப்பட்டது. அதன் பிறகு மீண்டும் இந்த படம் கடந்த 2019ம் ஆண்டு YNOT ஸ்டுடியோஸ் தயாரிப்பில் தொடங்கப்பட்டது. சென்னை, மதுரை மற்றும் லண்டன் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று 2019 டிசம்பர் வாக்கில் படப்பிடிப்பு முடிவடைந்து post production பணிகள் தொடங்கப்பட்டது.
அதன் பிறகு 2020ம் ஆண்டு மே மாதம் படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக படம் OTT தளத்தில் வெளியிட வாய்ப்புள்ளதாக அப்போது கூறப்பட்டது.
இந்நிலையில், நீண்ட காத்திருப்புக்கு பின் இன்று தனுஷின் ஜகமே தந்திரம் நெட்பிளிக்ஸில் வெளியாகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் உள்பட 17 மொழிகளில் டப்பிங் செய்து வெளியாக உள்ளது. ஓடிடியில் வெளியாகும் தமிழ்ப்படம் ஒன்று 17 மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இதே போல, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று மோத உள்ளன. மதியம் 3.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் நேரலை ஒளிபரப்பாக உள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இன்று நடைபெறும் நிலையில், இறுதி போட்டியில் களமிறங்கும் 11 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் - இந்திய அணி வீரர்கள்!
விராட் கோஹ்லி (கேப்டன்), ரோகித் சர்மா, சுப்மன் கில், புஜாரா, அஜிங்கியா ரஹானே, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, பும்ரா, முகமது ஷமி, இஷாந்த் சர்மா
சினிமா ரசிகர்களும், கிரிக்கெட் ரசிகர்களும் இவ்விரு நிகழ்ச்சியைக் காண காத்திருக்கின்றனர். இதனால், நேற்று இரவு முதல் சமூக வலைதள பக்கங்களில் #JagameThandhiramOnNetflix மற்றும் #WTC21 ஹேஷ்டேக்குள் டிரெண்டாகி வருகின்றது.