பிருத்விராஜ் இயக்கி மோகன்லால் நடித்துள்ள எம்புரான் திரைப்படம் கடந்த மார்ச் 27 ஆம் தேதி உலகளவில் வெளியானது. வெளியான இரண்டே நாட்களில் எம்புரான் திரைப்படம் 100 கோடி வசூலித்தது. தற்போது 150 கோடி வசூலை கடந்து படம் வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் எம்புரான் படத்திற்கு வலதுசாரிகள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. 2002 ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தை மையமாக வைத்து இப்படத்தின் கதை அமைந்துள்ளது. இதில் இந்துக்கள் தவறாக சித்தரிக்கப்பட்டிருப்பதாக சங் பரிவார் அமைப்பைச் சேர்ந்தவர்கள் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
மோகன்லால் மன்னிப்பு
எம்புரான் படத்தையும் அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் , நடிகர் , பிருத்விராஜ் என அனைவரையும் இந்துத்துவ அமைப்புகள் கடுமையாக தாக்கி படத்தை புறக்கணித்து வருகிறார்கள். கேரளாவிலும் படத்திற்கு பாஜக தலைவர் கண்டனம் தெரிவித்திருந்தார். எம்புரான் ஒரு தேச துரோக படம் என பலர் குறிப்பிட்டார்கள். இப்படியான நிலையில் கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் படத்தைப் பார்த்து தனது ஆதரவைத் தெரிவித்தார். தொடர்ந்து நடிகர் மோகன்லால் இப்படம் மத நம்பிக்கை உடையவர்களை புன்படுத்தி இருந்தால் அதற்காக தான் மன்னிப்புக் கேட்பதாகவும் படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய 17 காட்சிகளை நீக்க பேசி முடிவெடுத்திருப்பதாகவும் தெரிவித்தார். இது மோகன்லாலை ஆதரித்த பலருக்கு அதிர்ச்சியாக இருந்தது. மறுபக்கம் படத்தின் இயக்குநர் பிருத்விராஜ் பக்கம் திரும்பினார்கள் கலாச்சார காவலர்கள். பிருத்விராஜ் மோகன்லாலை ஏமாற்றி இந்த படத்தை எடுத்துள்ளதாக அவரை திட்டத் தொடங்கினார்கள்.
எம்புரான் படம் தங்களது மத உணர்வுகளை புன்படுத்தியதாக பல மோகன்லால் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்கள். இனிமேல் தங்கள் மோகன்லால் ரசிகர்கள் என சொல்லிக்கொள்ள மாட்டோம் என்றும் சிலர் தெரிவித்துள்ளார்கள். பொதுவாக அரசியல் விவகாரங்களில் இருந்து எந்த வித கருத்தும் சொல்லாமல் விலகியே இருந்து வரும் மோகன்லால். இந்த பிரச்சனையிலும் பகிரங்கமான மன்னிப்பு கேட்டு படத்தில் இருந்து காட்சிகளை நீக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் மோகன்லாலுக்கு ஆதரவு தெரிவித்த ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளார்கள். மோகன்லால் மன்னிப்புக் கேட்டுள்ளதைத் தொடர்ந்து இந்துத்துவ அமைப்புகள் படத்தின் இயக்குநர் பிருத்விராஜ் மீது சைபர் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
பிருத்விராஜ் ஒரு தேச விரோதி , எம்புரான் ஒரு தேச விரோத பிரச்சார படம் என அவரை கடுமையாக இந்துத்துவ அமைப்புகள் தாக்கி வருகின்றன.