சமயபுரம் கோயிலில் நடிகர் அஜித்தை காண ரசிகர்கள் குவிந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. 


தமிழ் சினிமா ரசிகர்களால் செல்லமாக தல என்றழைக்கப்படும் நடிகர் அஜித்குமாரின் நடிப்பில் கடைசியாக கடந்த பிப்ரவரி மாதம் வலிமை படம் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து அவர் 3வது முறையாக போனிகபூர்-இயக்குநர் ஹெச் வினோத் கூட்டணியில் ஒரு படத்திலும், விக்னேஷ் சிவன் இயக்கத்திலும் அடுத்தடுத்து நடிக்கவுள்ளார். இதற்கிடையில் படப்பிடிப்புக்கு சிறிது இடைவெளி கொடுத்திருந்த அஜித் வெளிநாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். 






ஐரோப்பிய நாடுகளில் அவர் பைக்கில் வலம் வந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதனிடையே வெளிநாட்டிற்கு சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு அஜித் கடந்த இரு தினங்களுக்கு முன் சென்னை திரும்பினார். இதனால் அவர் முழுவீச்சில் மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள பிரபலமான கோயிலில் ஒன்றான சமயபுரம் கோயிலுக்கு நடிகர் அஜித் வரவுள்ளதாக நேற்று தகவல் ஒன்று வெளியாகி காட்டுத்தீயாக பரவியது. 


உடனடியாக அப்பகுதியில் ரசிகர்கள் குவிய தொடங்கினர். ஏற்கனவே கடந்த ஜூலை 6 ஆம் தேதி தான் கோயிலின் கிழக்கு பகுதியில் கட்டப்பட்டு வந்த ராஜகோபுரத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனால் தினந்தோறும் அங்கு அரசியல் பிரமுகர்கள், திரையுலகினர், பொதுமக்கள் என பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. வாரக் கடைசியான நேற்று சமயபுரம் முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. இதில் அஜித்தைக் காண ரசிகர்களும் அப்பகுதிக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 




ஆனால் அஜித்துக்காக காத்திருந்த அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கடைசி வரை அவர் வரவேயில்லை. இதனால் நொந்துபோன ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக நடிகை யாஷிகா ஆனந்த் சமயபுரம் கோவிலுக்கு வருகை தந்தார். அதனைக் கண்ட ரசிகர்கள் யாஷிகாவுடன் போட்டிப் போட்டுக் கொண்டு செல்ஃபி எடுத்தனர். சுமார் 1 மணி நேரம் அவரை நகர விடாமல் ரசிகர்கள் செல்ஃபி எடுத்த வண்ணம் இருந்தனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண