ஆஸ்கர் விருது பெற்ற ஒலி வடிவமைப்பாளர் ரசூல் பூக்குட்டி சமீபத்தில் வெளியான இந்தியாவின் மிகப்பெரிய திரைப்படங்களுள் ஒன்றான `ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படத்தை `தன்பாலீர்ப்புக் காதல் கதை’ எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், இந்தத் திரைப்படத்தில் பாலிவுட் நடிகை ஆலியா பட் வெறும் அலங்காரப் பொருளாக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்துள்ள ரசிகர்கள் `இதுபோன்ற விமர்சனத்தை ஆஸ்கர் விருது பெற்ற ஒருவரிடம் எதிர்பார்க்கவில்லை’ எனக் கூறி வருகின்றனர்.
இந்திய சுதந்திரப் போரில் பங்கேற்ற இரண்டு தலைவர்களின் வாழ்க்கையைத் தழுவி புனைவாக, 1920-களின் பிரிட்டிஷ் இந்தியாவில் நடைபெறும் கதையாக உருவாகியிருந்தது `ஆர்.ஆர்.ஆர்’. தெலுங்கு நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோரின் முதன்மை நடிப்பில், இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்திலும் உருவாகியிருந்த `ஆர்.ஆர்.ஆர்’ கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நடிகரும் எழுத்தாளருமான முனிஷ் பரத்வாஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் `ஆர்.ஆர்.ஆர்’ படத்தைக் `குப்பை’ என வர்ணித்திருந்தார். இதற்கு பதில் தந்த ஒலி வடிவமைப்பாளர் ரசூல் பூக்குட்டி, `தன்பாலீர்ப்புக் காதல் கதை’ எனக் கூறியுள்ளார்.
ரசூல் பூக்குட்டி தன் பதிவில் கமெண்ட்களுக்குத் தடை விதித்திருந்தாலும், பல ரசிகர்கள் அவரது பதிவைக் குறிப்பிட்டு, ஆஸ்கர் விருது பெற்ற ஒருவரிடம் இதுபோன்ற விமர்சனத்தை எதிர்பார்க்கவில்லை எனக் கூறி வருகின்றனர். `தன்பாலீர்ப்புக் கதையாக இருந்தாலும், அதில் அவமானம் இல்லை. மொழியைத் தாண்டி, நம்மை ஈர்க்காவிட்டாலும், தொழில் மீது மரியாதை இருக்க வேண்டும்’ எனவும், `பொறாமையின் வெளிப்பாடு’ எனவும் பலரும் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.
`ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் தன்பாலீர்ப்பாளர்களோடு தொடர்புபடுத்தப்படுவது இது முதல் முறையல்ல. நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் இந்தத் திரைப்படம் வெளியான போது, மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த பார்வையாளர்கள் பலரும் இதனை அவ்வாறே கருதியிருந்தனர்.
மற்றொரு பதிவில், ரசூல் பூக்குட்டி இந்தப் படத்தில் நடிகை ஆலியா பட் வெறும் அலங்காரப் பொருள் மட்டும் தான் எனவும் கூறியுள்ளார். நடிகர்கள் ஆலியா பட், அஜய் தேவ்கன், ஷ்ரேயா சரண் முதலானோர் இந்தப் படத்தில் கேமியோ வேடங்களில் நடித்திருந்தனர். படத்தின் ப்ரொமோஷன் பணிகளின் போது நடிகை ஆலியா பட் தன் வேடம் சிறியதாக இருந்தாலும் முக்கியத்துவம் வாய்ந்தது எனக் கூறியிருந்தார். சுமார் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்தத் திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் மொத்தமாக சுமார் 1200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளது.
ஒலி வடிவமைப்பாளரான ரசூல் பூக்குட்டி பல்வேறு திரைப்படங்களில் பணியாற்றியவர். இவர் கடந்த 2009ஆம் ஆண்டு, `ஸ்லம்டாக் மில்லியனர்’ திரைப்படத்தில் சிறந்த ஒலி வடிவமைப்புக்காக ஆஸ்கர் விருது பெற்றவர்.