ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி உலகெங்கிலும் வெளியாக இருக்கிறது. படத்திற்கான முன்பதிவுகள் ஏற்கனவே தொடங்கியுள்ளன. தமிழ்நாட்டில் முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்க இருக்கும் நிலையில் கேரளா மற்றும் கர்நாடகாவில் அதிகாலை 6 மணிமுதல் சிறப்பு காட்சிகள் தொடங்க இருக்கின்றன. ஆனால் அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் படம் வெளியாகும் திரையரங்குகளின் முழுப் பட்டியல் இன்னும் வெளியிடப்படாமல் இருப்பது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது
குறைவான திரையரங்குகள்
அமெரிக்காவில் மதராஸி படத்தை வெளியிடுவதற்கான உரிமையை பிரத்யங்கிரா சினிமாஸ் பெற்றுள்ளது. சிவகார்த்திகேயனின் முந்தைய படம் அமரன் உலகளவில் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றிபெற்றும் மதராஸி படத்திற்கு மிக குறைவான ப்ரோமோஷன் மேற்கொள்ளப்பட்டுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் ஆரம்பகட்ட திரையரங்குகளின் பட்டியலே இதுவரை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 78 இடங்களில் 169 காட்சிகளுக்கு 853 டிக்கெட்கள் விற்பனையாகியுள்ளன. தகவலின்படி இதுவரை 8 % மட்டுமே டிக்கெட் விற்பனையாகியுள்ளது. படத்தை முறையாக ப்ரோமோட் செய்யாததும் , ஒரு வாரத்திற்கு முன்பாகவே திரையரங்குகளின் பட்டியலை வெளியிடாததுமே இதற்கான காரணமாக ரசிகர்கள் கருதுகிறார்கள்.
கடும் போட்டிக்கு இடையில் வெளியாகும் மதராஸி
அதே நேரம் செப்டம்பர் 5 ஆம் தேதி தெலுங்கில் அனுஷ்கா ஷெட்டி நடித்துள்ள காட்டி திரைப்படம் வெளியாகிறது. இந்தியில் டைகர் ஷ்ராஃப் நடித்துள்ள பாகி 4 , ஹாலிவுட்டில் கான்ஜூரிங் ஆகிய படங்களும் வெளியாகின்றன. இதனால் பாக்ஸ் ஆபிஸில் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கலாம். அண்மையில் மலையாளத்தில் வெள்யான லோகா திரைப்படமும் ரசிகர்களிடையே பெரியளவில் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்திற்கு வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில் உலகளவில் காட்சிகள் அதிகரிப்பட்டு வருகின்றன. மதராஸி படம் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெறும் பட்சத்தில் கூடுதல் காட்சிகள் திரையிடப்படும் என எதிர்பார்க்கலாம்.