கங்கனா ரனாவத்
பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் சர்ச்சைக்கு பெயர் போனவர். 2024 ஆம் ஆண்டு ஆண்டு மக்களவைத் தேர்தலில் இமாச்சல பிரதேசத்தில் மண்டி தொகுதியில் போட்டியிட்டு வென்றார். தேர்தலில் வெற்றிபெற்றால் தான் நடிப்பை கைவிட்டு முழு நேர அரசியலில் களமிறங்க இருப்பதாக கங்கனா ரனாவத் தெரிவித்திருந்தார். இதனிடையில் அவர் ஏற்கனவே நடித்து வந்த எமர்ஜென்சி திரைப்படம் வெளியாவதில் பல சர்ச்சை ஏற்பட்டது. இறுதியாக கடந்த ஜனவரி மாதம் இப்படம் வெளியாகி படுதோல்வி அடைந்தது. தற்போது கங்கவா ரனாவத் ஹாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதைத் தொடர்ந்து ரசிகர்கள் அவரது நிலைப்பாட்டை அடிக்கடி மாற்றிக் கொண்டிருப்பதை விமர்சித்து வருகிறார்கள்.
ஹாலிவுட் பற்றி கங்கனா ரனாவத்
ஹாலிவுட்டில் ஹாரர் டிராமா படமாக உருவாகும் 'Blessed be the evil' என்கிற படத்தில் கங்கனா நடிக்க இருக்கிறார். இப்படத்தில் இவருடன் டைலர் போஸி மற்றும் ஸ்கார்லெட் ரோஸ் ஸ்டாலோன் ஆகிய பிரபல நடிகர்கள் நடிக்கிறார்கள். அனுராக் ருத்ரா இந்த படத்தை இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இந்த வருட இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
பல்வேறு நேர்காணல்களில் ஹாலிவுட் சினிமாவை விமர்சித்து பேசியுள்ளார் கங்கனா ரனாவத். 2017 ஆம் ஆண்டு இந்திய நடிகர்கள் ஹாலிவுட்டிற்கு செல்வது பற்றி இப்படி கூறினார் கங்கனா " ஹாலிவுட் மார்கெட் முழுவதும் சரிந்து வருகிறது. இப்படியான நிலையில் ஹாலிவுட் சினிமாவிற்கு செல்வது என்பது முட்டாள்தனமானது. அதே நேரம் ஆசிய சினிமாத் துறை என்பது 15 ஆண்டுகள் முன்பு ஹாலிவுட் சினிமா இருந்த உச்சத்தில் இருந்து வருகிறது. இந்த மாதிரியான போலியான ஆசைகளுக்கு எல்லாம் நான் இரையாக மாட்டேன்"
"அமெரிக்க படங்களுக்கு நாம் ஆதரவு அளிக்கக் கூடாது ஏனென்றால் அவை நம் இந்திய திரையரங்குகளை ஆக்கிரமிக்கின்றன. ஒரு தேசமாக நான் ஒன்றினைந்து நமது படங்களுக்கு அதிக ஆதரவு கொடுக்க வேண்டும். அது தமிழ் , மலையாளம் , தெலுங்கு , இந்தி எந்த மொழிப் படமாக இருந்தாலும் சரி . " என 2021 ஆம் ஆண்டு கூறினார்.
இதே போல் 2022 ஆம் ஆண்டு ஹாலிவுட் சினிமா பற்றி இப்படி கூறினார் " நம்மிடம் நிறைய திறமையானவர்கள் இருக்கும் போது நாம் ஏன் அங்கு செல்ல வேண்டும். அவர்கள் தான் இப்போது நம் சினிமாத் துறையில் வந்து வேலை செய்கிறார்கள். "
ரசிகர்கள் விமர்சனம்
இப்படியெல்லாம் சொல்லிவிட்டு இன்று ஹாலிவுட்டில் பட வாய்ப்பு வந்ததும் கம்பி நீட்டிவிட்டாரே கங்கனா என ரசிகர்கள் அவரை விமர்சித்து வருகிறார்கள். அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்.