பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஜானி மாஸ்டர்


பிரபல நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி பெங்களூர் போலீஸால் கோவாவில் வைத்து கைது செய்யப்பட்டார். உடன் பணிபுரிந்த பெண் துணை நடன இயக்குநரை பாலியல் வன்கொடுமை செய்த புகாரின் அடிப்படையில் காவல் துறை அவரை கைது செய்தது. தற்போது இந்த வழக்கு விசாரணையில் இருந்து வரும் நிலையில் ஜானி மாஸ்டருக்கு கடந்த அக்டோபர் 24 ஆம் தேதி நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.


குடும்பத்துடன் ஒன்று சேர்ந்த ஜானி மாஸ்டர்


சிறையில் இருந்து வெளியானதும் ஜானி மாஸ்டர் தனது சமூக வலைதள பக்கத்தில் தொடர்ச்சியாக வீடியோ வெளியிட்டு வருகிறார். முன்னதாக நடிகர்களுக்கு நடனம் சொல்லிக் கொடுக்கும் வீடியோவை வெளியிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது தனது குடும்பத்துடன் வீடியோ வெளியிட்டுள்ளார். நீண்ட நாட்களுக்கு பின் தனது குடும்பத்தை சந்திக்கிறார் ஜானி மாஸ்டர் . அவரை  அவரது மகன் மகள் மற்றும் மனைவி கண்களில் கண்ணீருடன் வரவேற்றனர். " கடந்த 37  நாட்களில் எங்களிடம் நிறைய பறிபோய்விட்டன. என் குடும்பத்தின் பிரார்த்தனைதான் என்னை இங்கே கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது. உண்மை வெளிவர தாமதமானாலும் அது ஒரு நாள் வெளிவரும். " என்று ஜானி மாஸ்டர் பதிவிட்டிருந்தார்.






ஒரு பக்கம் ஜானி மாஸ்டருக்கு ஆதரவுகள் இருந்தாலும் மற்றொரு தரப்பு ரசிகர்கள் அவரை சரமாரியாக கேள்விகளால் தாக்குகிறார்கள். ' இவரு பெரிய சுதந்திர போராட்ட தியாகி ஜெயிலுக்கு போயிட்டு வராரு" என்று ஒருவர் கமெண்ட் செய்திருந்தார். மற்றொருவர் " நீங்கள் ஒன்றும் சமூக சேவை செய்து ஜெயிலுக்கு போகவில்லை ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக ஜெயிலுக்கு போனீர்கள்' என்று கூறியுள்ளார்.