நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் அயலான் படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 


கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் ‘நேற்று இன்று நாளை’ படத்தின் இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் “அயலான்”. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாகவும், ரகுல் ப்ரீத் சிங் ஹீரோயினாகவும் நடித்து வருகின்றனர். மேலும் சரத் கேல்கர், இஷா கோபிகர், யோகிபாபு, கருணாகரன்  உள்ளிட்ட பலரும் இப்படத்தில் இணைந்துள்ளனர். 


ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தில் இருந்து முதல் பாடல் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தில் வேற்றுக்கிரகவாசிகள் தொடர்பான காட்சிகள் அதிகளவில் இடம் பெற உள்ளதால் தரமான கிராஃபிக்ஸ் பணிகளை படக்குழு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அயலான் படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஒருபக்கம் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், மறுபக்கம் பதற்றமடைந்துள்ளனர்.


காரணம் கடந்த தீபாவளிக்கு சிவகார்த்திகேயன் நடிப்பில் முதல் தீபாவளி வெளியீடாக பிரின்ஸ் படம் வெளியாகியது.பெரும் எதிர்பார்ப்பில் தியேட்டருக்கு சென்ற ரசிகர்களுக்கு இப்படம் பேரிடியாக அமைந்தது. படுதோல்வியடைந்த அப்படத்தால் அடுத்தடுத்த படங்களை மிக கவனமுடன் சிவகார்த்திகேயன்  தேர்வு செய்து வருகிறார். 


தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிக்கை: 


முன்னதாக நேற்றைய தினம் கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றை  வெளியிட்டது. அதில், “


அயலான் திரைப்படத்தை இடைவிடாத கடின உழைப்பை செலுத்தி படமாக்கியுள்ளோம். மேலும் பல தடைகளைத் தாண்டி, 'அயலான் 'அறிவிப்பை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். அயலான் ' திரைப்படத்தின் தரத்தில் சமரசம் செய்ய விரும்பாத நாங்கள், படத்தின்  CGI காட்சிகளுக்கு பெரும் மெனக்கலுடன் பணி புரிந்துள்ளோம்.  அயலான்,  ஒரு பான்-இந்தியன் திரைப்படம் என்பதால்  அதிக எண்ணிக்கையிலான CGI  காட்சிகளைக் கொண்டிருக்கும் திரைப்படமாக உருவாகியுள்ளது. திரைப்படம் கச்சிதமாக முழுமையடைய எங்களுக்கு போதிய நேரம் தேவைப்பட்டது.


திரைப்படம் முழுவதும் வரும் வேற்றுகிரகவாசி கதாப்பாத்திரம் அனைவரும் விரும்பும் வகையில் காட்சிப்படுத்தபட்டுள்ளது. மேலும், 4500+ VFX காட்சிகளைக் கொண்ட இந்திய சினிமாவின் முதல் முழு நீள லைவ்-ஆக்சன் திரைப்படமாக ‘அயலான்’ இருக்கும் என்பதை உங்களுக்குத் தெரிவிப்பதில் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நேரத்தில், பல ஹாலிவுட் திரைப்படங்களின் CG-க்குப் பின்னால் உள்ள Phantom FX நிறுவனத்திற்கு, அவர்களது அளப்பரிய CG பணிக்காக நன்றியையும் தெரிவிக்க விரும்புகிறோம். 


உங்களது பொறுமை மற்றும் இடைவிடாத ஆதரவிற்காக அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். உங்களது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் திரைப்படமாக அயலான் இருக்கும் என்று நாங்கள் உறுதியளிக்கிறோம்” என தெரிவித்திருந்தது” என்பது குறிப்பிடத்தக்கது.