சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் ஜெயராம் கண் தானம் செய்வதற்கான ஆவணத்தில் கையெழுத்திட்ட சம்பவம் ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது. 


மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் ஜெயராம். தமிழில் 1993 ஆம் ஆண்டு கோகுலம் படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து முறைமானன், பெரிய இடத்து மாப்பிள்ளை, தெனாலி, பஞ்ச தந்திரம், பரம சிவன், பிரிவோம் சந்திப்போம், தாம் தூம், ஏகன், சரோஜா, துப்பாக்கி, பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2 ஆம் பாகம் ஆகியவற்றில் நடித்து அப்போதைய, தற்போதைய ரசிகர்களுக்கு நல்ல பரீட்சையமாகி உள்ளார். இவருடைய கிண்டலான பேச்சும், காமெடியான நடிப்பும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அவரது மகன் காளிதாஸ் ஜெயராமும் தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். 


இப்படியான நிலையில் நேற்று, சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ் மற்றும் ராஜன் கண் மருத்துவமனை சார்பில் நடைபெற்ற கண் தானம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் சுமார் 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் ஜெயராம் பங்கேற்றார். தொடர்ந்து பேரணியில் கலந்து கொண்ட அவர், இறுதியில் கண் தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், தானம் செய்ய ஒப்புதல் அளிக்கும் பத்திரத்தில் கையெழுத்திட்டார். அவரைத் தொடர்ந்து பல கண் தானம் செய்ய ஒப்புதல் அளிக்கும் பத்திரத்தில் கையெழுத்திட்டனர்.


பொதுவாக உடல் உறுப்பு தான் தொடர்பான விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்த பிரபலங்கள் முன் வர வேண்டும் என பலரும் சமூக வலைத்தளங்களில் கோரிக்கை விடுத்து வருகின்றனர். உறுப்பு தானம் வாழ்க்கை போராட்டம் நடத்தி வரும் பலருக்கும் வாழ்வளிக்கும் என்பதால் அனைவரும் இதுதொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என மருத்துவர்களும் தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே பல பிரபலங்கள் இத்தகைய உறுப்பு தானம் செய்ய முன்வந்து அதற்கான படிவத்தில் கையெழுத்திட்டுள்ளனர். அந்த வகையில் ஜெயராமின் செயல் சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர். 




மேலும் படிக்க: ‘மோசமான இசை நிகழ்ச்சி.. எங்க பணம் எல்லாம் போச்சு’ .. புலம்பிய ரசிகர்கள்.. பதில் சொல்வாரா ஏ.ஆர்.ரஹ்மான்?