இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நடத்திய இசைக்கச்சேரியில் டிக்கெட் வாங்கி சென்றவர்களுக்கு அநீதி நடந்ததாக சமூக வலைத்தளங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திரைத்துறையில் இசைத்துறையில் இருப்பவர்கள் படங்கள், ஆல்பம் பாடல்களுக்கு இசையமைப்பதை தவிர்த்து ரசிகர்களை மகிழ்விக்கும் வண்ணம் அவ்வப்போது இசை கச்சேரிகளை நடத்து வழக்கம். அந்த வகையில் இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா, தேவா, வித்யாசாகர், விஜய் ஆண்டனி ஆகியோர் சமீப காலங்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்தினர். இதன் வரிசையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் அந்த நாளன்று பலத்த மழை பெய்த நிலையில், ரசிகர்களின் நலன் கருதி இசைநிகழ்ச்சி வேறு ஒரு நாளுக்கு ஒத்தி வைக்கப்படுவதாக ஏஆர்ரஹ்மான் அறிவித்தார். இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பினர். இப்படியான நிலையில் நேற்று கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஆதித்யா ராம் பேலஸ் சிட்டியில் நடந்தது. பெரும் கூட்டம் கூடும் என்பதால் முன்கூட்டியே அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் தங்கள் பயண திட்டமிடல்களை முடிவு செய்யுமாறு காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இசை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ACTC events நிறுவனம் செய்திருந்த நிலையில், மதியம் 3 மணி முதல் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் 4 மணி ஆகியும் கேட் திறக்கவில்லை என்றும், கடுமையான ட்ராஃபிக் மற்றும் பார்க்கிங் குளறுபடிகளால் பல கி.மீ.,க்கு முன்னதாகவே வாகனங்களை நிறுத்தி விட்டு பலரும் நடந்தே சென்றனர். உள்ளே, ப்ளாட்டினம், டைமண்ட், கோல்ட், சில்வர் என்ற அடிப்படையில் டிக்கெட் வழங்கப்பட்டிருந்த நிலையில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் எந்த டிக்கெட் என்றே சரிபார்க்காமல் வந்தவர்களை உள்ளே அனுப்பியதாக புகார் எழுந்தது. இதனால் உரிய டிக்கெட் இருந்தும் பலரால் நிகழ்ச்சியை பலரால் காண முடியவில்லை.
பலரும், ‘ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து வாங்கினோம். எல்லாம் போச்சு’ என புலம்பி தீர்த்தனர். இதனால் ஆவேசத்தில் ‘எங்களுக்கு இசை நிகழ்ச்சியே தேவையில்லை’ என சிலர் டிக்கெட்டுகளை கிழித்தெறிந்து விட்டு வீடு திரும்பினர். இப்படியான நிலையில் ‘மறக்குமா இசை நிகழ்ச்சி’ ரசிகர்கள் மனதில் மறக்காத ரணத்தை ஏற்படுத்தி விட்டது. இதற்கெல்லாம் ஏ.ஆர்.ரஹ்மான் என்ன பதில் சொல்லப் போகிறார் என்பதே அனைவரது கேள்வியாகவும் உள்ளது.