பிளடி பெக்கர்


இயக்குநர் நெல்சன் திலிப் குமார் தயாரிப்பாளராக களமிறங்கிய படம் பிளடி பெக்கர். ஃபிலமெண்ட் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் வெளியான இப்படத்தில் கவின் நாயகனாக நடித்தார். நெல்சனின் உதவி இயக்குநராக பணியாற்றிய  சிவபாலன் இப்படத்தை இயக்கினார். ஜென் மார்டின் இசையமைத்தார். கவின் முன்னதாக நடித்த ஸ்டார் திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில் பிளடி பெக்கர் படம் மீதும் ரசிகர்களுக்கு பெரியளவில் எதிர்பார்ப்புகள் இருக்கவில்லை. கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு இப்படம் வெளியானது. முழுக்க முழுக்க டார்க் ஹ்யூமர் ஜானரில்  உருவான பிளடி பெக்கர் திரைப்படம் குறிப்பிட்ட சில ரசிகர் தரப்பை மட்டுமே கவர்ந்தது. மற்றொரு தரப்பு ரசிகர்கள் படத்திற்கு நெகட்டிவான விமர்சனங்களையே வழங்கினர். ஒட்டுமொத்தமாக கவினின்  நடிப்பு பாராட்டுக்களைப் பெற்றாலும் படத்திற்கு தேவையான வரவேற்பு கிடைக்காததால் படம் வசூல் ரீதியாக சரிவை சந்தித்தது


பிளடி பெக்கர் ஓடிடி ரிலீஸ்


சுமார் 10 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் 7 கோடி வசூல் ஈட்டியது. படத்தின் ஓடிடி மற்றும் சேட்டலை விற்பனை மூலம் தயாரிப்பாளருக்கு பெரியளவில் நஷ்டம் ஏற்படவில்லை என்றாலும் படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர்களுக்கு இப்படம் சிறிய நஷ்டத்தை ஏற்படுத்தியது இதனால்  விநியோகஸ்தர்களுக்கு  நெல்சன் நஷ்ட ஈடு வழங்கினார். வரும் நவம்பர் 29 ஆம் தேதி அமேசான் பிரைமில் பிளடி பெக்கர் படம் வெளியாக இருக்கிறது.


பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெறும் பிளடி பெக்கர்






ஓடிடியில் வெளியாவதற்கு முன்பே இப்படம் டெலிகிராம் உள்ளிட்ட தளங்களில் சட்டவிரோதமாக வெளியாகியுள்ளது. பைரஸியில் படத்தைப் பார்த்த ரசிகர்கள் பிளடி பெக்கர் படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்களை கொடுத்து வருகிறார்கள். படம் திரையரங்கில் வெளியானபோது ஒரு சில நெகட்டிவ் விமர்சனங்களைப் பார்த்து பெரும்பாலான ரசிகர்கள் படத்தை தவிர்த்தார்கள். வரும் நவம்பர் 29 ஆம் தேதி முதல் படத்திற்கு மேலும் பாசிட்டிவான வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.