பிரியாணி மேன் தற்கொலை முயற்சி
பிரபல யூ டியூப் சேனலான பிரியாணி மேன் சேனலின் உரிமையாளர் அபிஷேக் லைவ் வீடியோவில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உணவு ரிவியூவரான இர்ஃபானுடன் கருத்து மோதலில் ஈடுபட்டதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டதைத் தொடர்ந்து பிரியாணி மேன் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இர்ஃபான் - பிரியாணி மேன் : மோதல்
கடந்த ஆண்டு மே மாதம் மறைமலை நகரில் இர்ஃபானின் கார் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் சாலையை கடக்க முயன்ற மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். இந்த காரை இர்ஃபானின் உறவினர் அசாருத்தீன் ஓட்டியாக கூறப்பட்டதைத் தொடர்ந்து இரண்டு பிரிவுகளின் கீழ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.
இந்த நிகழ்வு நடந்து கிட்டதட்ட ஒரு ஆண்டு காலத்திற்கு பிறகு கடந்த ஜூன் மாதம் பிரியாணி மேன் தனது சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் இர்ஃபான் தொடர்ச்சியாக சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். ஆனால் தனது அரசியல் செல்வாக்கால் அவர் இந்த சர்ச்சைகளில் இருந்து தப்பித்து விடுகிறார் என்று குறிப்பிட்டிருந்தார். கார் விபத்து , பிறப்பதற்கு முன்பே குழந்தையின் பாலினத்தை வெளியிட்டது, சுகாதாரமற்ற கடைகளில் சாப்பிட மக்களை ஊக்குவிப்பது என பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் இர்ஃபான் மீது வைத்தார்.
பிரியாணி மேன் அபிஷேக்கின் வீடியோவிற்கு பதில் கூறும் விதமாக இர்ஃபான் தனது சேனலில் ஒரு மாதம் கழித்து வீடியோ வெளியிட்டார். இதில் தன் மீது அபிஷேக் சுமத்தும் குற்றச்சாட்டுகள் பொய்யனவை என்று தன்னிடம் உள்ள தரவுகளின் வழி அவர் விளக்கினார். மேலும் பிரியாணி மேனை இந்த வீடியோவில் இர்ஃபான் ஆபாசமான வார்த்தைகளால் திட்டியிருந்தார்.
தொடர்ந்து பிரியாணி மேன் வெளியிட்ட வீடியோவில் இர்ஃபானை அவர் கடுமையான ஆபாச வார்த்தைகளால் திட்டினார். சமீபத்தில் பிறந்த இர்ஃபானின் குழந்தை , அவரது உடலை உருவ கேலி செய்து என எல்லை மீறிதான் பேசினார் பிரியாணி மேன். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியதைத் தொடர்ந்து பிரியாணி மேன் மீது கடுமையான விமர்சனங்கள் எழத் தொடங்கின. இர்ஃபான் குழந்தையை குறிப்பிட்டு அவர் வீடியோ வெளியிட்டது நெட்டிசன்களில் ஆதரவை இர்ஃபான் பக்கம் திருப்பியது.
நேரலையில் தற்கொலை முயற்சி
கடந்த ஒரு வார காலமாக இந்த சர்ச்சை பேசப்பட்டு வரும் நிலையில் நேற்று ஜூலை 29-ஆம் தேதி பிரியாணி மேன் சேனலை நடத்திவரும் அபிஷேக் லைவ் வீடியோவில் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
தனது தற்கொலைக்கு ஜேசன் என்பவர் தான் காரணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவைப் பார்த்த அவரது நண்பர்கள் அபிஷேக்கின் அம்மாவிற்கு ஃபோன் செய்ததைத் தொடர்ந்து அவர் அபிஷேக்கை காப்பாற்றியதாக தெரியவந்துள்ளது. பிரியாணி மேனின் இப்படியான செயலுக்கு மேலும் கண்டனங்கள் வலுத்து வரும் நிலையில் அவரை கைது செய்ய வேண்டும் என்கிற கருத்து வலுத்து வருகிறது.
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும்.
மாநில உதவி மையம் :104
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை,
ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)