உடல்நலக்குறைவு காரணமாக பழம்பெரும் நடிகை ஜமுனா உயிரிழந்த சம்பவம் திரையுலகினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


1936 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 ஆம் தேதி கர்நாடகா மாநிலம் ஹம்பியில் பிறந்த நடிகை ஜமுனா, சிறுவயதிலிருந்தே நாடகங்களில் நடித்து வந்தார். தனது பதினாறு வயதிலேயே திரைப்படங்களில் நடிக்க தொடங்கிய அவர் 1952 ஆம் ஆண்டு தெலுங்கில் புட்டிலு படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தமிழில் எம்ஜிஆர், சிவாஜிகணேசன், ஜெமினி கணேசன், ஜெய்சங்கர் உள்ளிட்ட பல நடிகர்களுடன் நடித்துள்ளார். தங்கமலை ரகசியம், நிச்சய தாம்பூலம், குழந்தையும் தெய்வமும், நல்ல தீர்ப்பு , மனிதன் மாறவில்லை, மருத நாட்டு வீரன், தூங்காதே தம்பி தூங்காதே ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதில் தூங்காதே தம்பி தூங்காதே படத்தில் கமலுக்கு அம்மாவாக நடித்திருந்தார். 


1968 ஆம் ஆண்டு மிலன் என்ற இந்தி படத்துக்காக சிறந்த துணை நடிகைக்கான  பிலிம்பேர் விருதும்,  பண்டாட்டிகபுரம் என்ற தெலுங்கு படத்துக்காக பிலிம்பேர் விருதும் வென்றார். மேலும் 1999 ஆம் ஆண்டு  தமிழ் சினிமாவை வளர்ப்பதில் பங்காற்றியதற்காக எம்ஜிஆர் விருதும், ஆந்திர அரசு சார்பில் வாழ்நாள் சாதனைக்கான விருதும் பெற்றுள்ளார். மேலும்தெலுங்கில் 88 படங்களும், தமிழில் 27 படங்களும், கன்னடத்தில் 8 படங்களும், இந்தியில் 11 படங்களும் என 100க்கும் மேற்பட்ட படங்களில் ஜமுனா நடித்துள்ளார். 


அதேசமயம் 1980 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசில் இணைந்து,1989 ஆம் ஆண்டு ராஜமந்திரி மக்களவைத் தொகுதியில் இருந்து எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் 1990 ஆண்டில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். 1991 ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்து அரசியலில் இருந்து விலகினார். தொடர்ந்து தனது கடைசி காலம் வரை படங்களில் நடித்து வந்த ஜமுனா, எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிய பாகுபலி படத்தை “முட்டாள் தனமான படம்” என விமர்சித்து பரபரப்பை ஏற்படுத்தினார். 


இதனிடையே 86 வயதான ஜமுனா வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் இன்று காலை அவர் உயிரிழந்தார். அவரது மறைவு செய்தி திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.