சென்னை விருகம்பாக்கத்தில் மெட்ரோ ரயில் அதிகாரியை தாக்கியதாக பின்னணி பாடகர் வேல்முருகனை போலீசார் கைது செய்துள்ளனர். 


சென்னை விருகம்பாக்கத்தில் மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதனால் இரவு நேரங்களில் அந்த பாதையில் உள்ள ஆற்காடு சாலை ஒருவழியாக மாற்றம் செய்யப்படுகிறது. இதனிடையே நேற்று முன்தினம் இரவு விருகம்பாக்கம் வேம்புலி அம்மன் கோயில் சிக்னல் அருகே பேரிகாட் வைத்து ஒருவழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டிருந்தது. அப்போது அந்த வழியாக பாடகர் வேல்முருகன் வந்துள்ளார். அவர் தன்னுடைய காரை போக்குவரத்து தடை செய்ய வைக்கப்பட்டிருந்த பேரிகார்டை நகர்த்தி எடுத்து செல்ல முயன்றுள்ளார். 


இதனைப் பார்த்த மெட்ரோ கட்டுமான நிறுவனத்தின் உதவி மேலாளர் வடிவேல் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி கார் செல்வதை தடுத்துள்ளார். இதனால் வேல்முருகனுக்கும், உதவி மேலாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் உதவி மேலாளர் வடிவேலுவை வேல்முருகன் தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து வடிவேலு விருகம்பாக்கம் போலீஸில் புகார் அளித்தார். அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் வேல்முருகனை கைது செய்தனர். இந்த சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


வேல்முருகன் சினிமா பயணம் 


2008 ஆம் ஆண்டு சுப்பிரமணியபுரம் படத்தில் இடம்பெற்ற “மதுர குலுங்க” பாடல் மூலம் தமிழ் சினிமாவில் பாடகராக அறிமுகமானார் வேல்முருகன். தொடர்ந்து ஆடுங்கடா மச்சான் ஆடுங்கடா, ஒத்த சொல்லால, ஆம்பளைக்கும் பொம்மளைக்கும் அவசரம், வேணா மச்சான், போட்டது பத்தல மாப்பிள்ளை, பெட்ரமாஸ்க் லைட்,கருப்பு நிறத்தழகி, கத்திரி பூவழகி என ஏகப்பட்ட பிரபலமான பாடல்களை பாடியுள்ளார். அதுமட்டுமல்லாம் பிக்பாஸ் சீசன் 4ல் போட்டியாளராகவும் கலந்து கொண்டார்.