இந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் இளையராஜா. அதேபோல, இந்திய திரையுலகின் முன்னணி பாடகி சித்ரா. இவர் இளையராஜாவை முதன்முறையாக சந்தித்தபோது ஏற்பட்ட அனுபவத்தை தனியார் செய்தி யூ டியூப் சேனலுக்கு அளித்துள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது,


“ கேரளாவில் எங்கள் வீட்டின் அருகே சிவா தியேட்டர்ஸ் என்ற திரையரங்கம் இருந்தது. அங்கு எப்போதும் தமிழ் படங்கள்தான் அதிகளவில் வெளியாகும். படம் ஆரம்பிப்பதற்கு முன்பு எப்போதும் பாடல் ஒலித்துக்கொண்டே இருக்கும். அப்படிதான் நான் இளையராஜா சார், எம்.எஸ்.விஸ்வநாதன் பாடல் கேட்டது. நான் திருவனந்தபுரம் என்பதால் ரேடியோவிலும் மலையாள பாடல்கள்தான் ஓடும். இந்த திரையரங்கத்தினால்தான் ஏராளமான தமிழ்பாடல்களை கேட்டேன். அப்படிதான் இளையராஜா இசை எனக்கு அறிமுகமாகியது.




யேசுதாசுடன் நிகழ்ச்சியில் இணைந்து பாடும்போது ஏராளமான இளையராஜா பாடல்களை பாடினேன். அப்போது அவரது புகைப்படமும் இல்லை. அவரை நான் நேரிலும் பார்த்தது இல்லை. ஆனால், அவரது இசையில் ஜானகியம்மா, சுசீலாம்மா பாடிய பாடல்களை எல்லாம் கேட்கும்போது எப்படியாவது இளையராஜாவை ஒருமுறையாவது வாழ்க்கையில் சந்திக்க வேண்டும்? என்று ஆசைப்பட்டேன்.


அப்போதுதான், மலையாளத்தில் வெளியான படம் தமிழில் பூவே பூச்சூடவா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. மலையாளத்தில் இயக்கிய பாசில் சாரே படத்தை இயக்கினார். படத்தை பார்த்து இளையராஜா சார், இது யாருடைய குரல் என்று கேட்டுள்ளார். பாசில் சார்தான் சித்ரா என்று என்னைப் பற்றி கூறியுள்ளார். எனது குரல் மிகவும் குழந்தைத்தனமாக இருக்கும்.




அதைக்கேட்ட இளையராஜா சார், வரச்சொல்லுங்கள். வாய்ஸ் டெஸ்ட் செய்து பார்க்கலாம் என்றுள்ளார். பாசில் சார் எனது அப்பாவிடம் பேசிவிட்டு, என்னிடம் அடுத்த முறை நீ சென்னை செல்லும்போது ராஜாசாரை சந்திக்க வேண்டும் என்று கூறினார். நான் ஏதோ என்னை கிண்டல் செய்கிறார் என்று நினைத்து கிண்டல் செய்யாதீர்கள் சார் என்றேன். பின்னர், பாசில் சாரே அடுத்த முறை ரெக்கார்டிங்காக சென்னை செல்லும்போது ராஜா சாரை சந்தித்துவிட்டு வாருங்கள் என்றார்.  


மேலும் படிக்க : 28 ஆண்டுகள்.... அழைப்பு விடுத்த இளையராஜா... முதல் ஆளாய் ஓகே சொன்ன ரஜினி...! மீண்டும் இணையும் வெற்றிக்கூட்டணி!


யேசுதாஸ் பாடலுக்கு வயலின் வாசிப்பவர்தான் இளையராஜா சாருக்கும் வயலின் வாசித்தார். அவர் மூலமாகதான் இளையராஜா சாரை முதன்முறையாக சந்தித்தேன். அவர் என்னை பாடக்கூப்பிடுவாரா? என்பதைக் காட்டிலும் அவரைப் பார்த்ததே எனக்கு மிகுந்த பதற்றமாகி விட்டது. என்னோட கற்பனையில் இளையராஜா என்றால் பெரிய உருவம் என்று எல்லாம் கற்பனை செய்து வைத்திருந்தேன். ஆனால், உள்ளே அறைக்கு சென்று பார்த்தால் சின்ன உருவமாக இளையராஜா சார் அமர்ந்திருந்தார்.




ஏதாவது கீர்த்தனைகள் பாடுகிறியா? என்று கேட்டார். நான் தியாகராஜா கீர்த்தனை பாடினேன். அவரை முதன்முதலில் பார்த்த பதற்றத்தில் நிறைய இடங்களில் மூச்சு எடுக்கக்கூடாத இடத்தில் மூச்சு எடுத்து தப்பு, தப்பாக பாடினேன். அதை எல்லாம் திருத்தி சரியாக சொல்லிக்கொடுத்தார். பின்னர், ஆல் தி பெஸ்ட் என்று சொல்லி அனுப்பிவிட்டார். பிடிச்சுருக்கா? இல்லையா? என்று அவர் சொல்லவில்லை. முழுவதும் தப்பு, தப்பாக பாடியுள்ளோம். அவருக்கு பிடித்திருக்காது என்று நானும் நினைத்தேன். இப்படியொரு மேதாவி இசையமைப்பாளரை பார்த்ததே போதும் என்று வந்துவிட்டேன். ஆனாலும், என்னை பாடவைத்தார்.”


இவ்வாறு அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார்.  


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண