கடனத 80 ஆண்டுகால ஆஸ்கர் வரலாற்றில் மிக நீண்ட ஆஸ்கர் உரை ஹாலிவுட் நடிகை க்ரீயர் கார்ஸனுடையது.


ஆஸ்கர் விருதுகள் 2024


2024 ஆம் ஆண்டுக்காக ஆஸ்கர் விருதுகள் வரும் மார்ட் மாதம் அறிவிக்கப் பட இருக்கின்றன. சிறந்த படம் , சிறந்த  நடிகர்,  நடிகைக்கான விருதுகளின் பரிந்துரையில் பல்வேறு முன்னணி கலைஞர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இந்த விருதுகளை பெற்றுக்கொண்ட இந்த கலைஞர்கள் மேடையில் பேசப்போகும் உரைகள் அடுத்த சில வாரங்களுக்கு பத்திரிகைகளில் பேசுபொருளாக இருக்கும். எவ்வளவு சிறந்த உரையாக இருந்தாலும் ஆஸ்கர் வரலாற்றில் ஒருவரின் சாதனையை இனி எந்த காலத்திலும் மாற்றமுடியுமா என்பது கேள்வியே. ஹாலிவுட்  நடிகை க்ரீயர் கார்ஸன் தான் உடைக்க முடியாத அந்த சாதனையை செய்துவிட்டு போனவர்


கின்னஸ் சாதனை படைத்த உரை


ஆஸ்கர் விருது வெல்லும்  நடிகர்கள் அல்லது இயக்குநர்களுக்கு மேடையில் பேசுவதற்கு கொடுக்கப்படும் அதிகபட்ச நேரம் ஒரு நிமிடம்தான். லட்சக்கணக்கான மக்கள் பார்க்க நேரலையில் ஒளிபரப்பாகும் இந்த விருது விழாவில் நேரம் மிகத்தீவிரமாக பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த ஒரு நிமிடத்திற்கு கூடுதலாக சில நொடிகள் பேச கலைஞர்கள் அனுமதிக்கப்படுவார்கள். தனக்கு கொடுக்கப் பட்ட நேரட்த்தை கடந்து ஒரு நடிகர் பேசுகிறார் என்றால் உடனே பின்னணி இசை ஒன்றை ஒலிக்கவிட்டு அவர் நினைவுறுத்தப்படுவார்.  அப்படியான ஒரு இடத்தில் 7 நிமிடங்கள் பேசி கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றவர் தான்  நடிகை க்ரீயர் கார்ஸன். அவரது இந்த உரையில் வெறும் 3 நிமிடங்கள் மட்டுமே ஆஸ்கர் விருது வழங்கும் குழு பதிவு செய்து வைத்திருக்கிறது. அதுவும் ப்ரோமோஷன்களுக்காக.


நாம் எல்லாரும் வெற்றிபெற்றோம்


1942 ஆம் ஆண்டு வெளியான மிஸஸ் மினிவர் படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை வென்றால் க்ரீயர் கார்ஸன். போர் மற்றும் காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார். இந்த விருதை பெற்றுக் கொண்ட அவர் தான் ஒரு அகதியாக அமெரிக்காவுக்கு வந்து தற்போது இந்த நாட்டு மக்களிடம் இருந்து இவ்வளவு பெரிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ள மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மேலும்  ஒரு நாட்டின் சிறந்த கலைஞர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டு அவர்களில் ஒருவராக வெற்றிபெறும் அனுபவத்தை பற்றி மிக உற்சாகமாக பேசினார்.  “ஒவ்வொரு கலைஞரும் தனித்துவமானவர், ஒருவருடைய திறமை இன்னொருவருடைய திறமையுடன் ஒப்பிட முடியாது இதில் ஒரு தனி நபர் மட்டுமே வெற்றிபெறுவதில்லை ஆலிஸ் இன் வண்டர்லேண்ட் கதையில் வரும் வசனம்போல் நாம் எல்லாரும் இதில் வெற்றியாளர்கள்தான்” என்று தனது உரையை அவர் முடித்துக் கொண்டார். ஆஸ்கர் வரலாற்றில் பேசப்பட்ட மிக நீண்ட உரையாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றது இந்த உரை 


தீக்கு இரையான ஆஸ்கர்


தனது வாழ்நாளில் மொத்தம் எட்டு முறை சிறந்த நடிகைக்கான பிரிவில் ஆஸ்கர் விருதுக்கு க்ரீயர் கார்ஸன் பரிந்துரைக்கப் பட்டிருக்கிறார். அவர் வென்ற ஒரே ஆஸ்கர் விருது கலிஃபோர்னியாவில் அவரது வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் அழிந்து போனது. அதிர்ஷ்டவசமாக ஆஸ்கர் சார்பாக அவருக்கு அந்த விருது மாற்றித்தரப்பட்டது.