இசையில் இளைஞர்களின் போதை மருந்தாக கொண்டாடப்படும் யுவன் ஷங்கர் ராஜா இன்று தனது 43வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 






இசைஞானி இளையராஜாவின் மகன் என்ற அடையாளத்துடன் 1997 ஆம் ஆண்டு சரத்குமார் நடித்த அரவிந்தன் படம் மூலம் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானார் யுவன் ஷங்கர் ராஜா. அப்போது அவருக்கு வயது 16 தான். யுவனின் சில இசைக்கோர்வைகளைக் கேட்ட தயாரிப்பாளர் டி.சிவா, அப்படத்தின் முன்னோட்டக் காட்சிகளுக்கு இசையமைக்க சொல்லியுள்ளார். அது அவரை கவர்ந்ததால் அரவிந்தன் படத்தின் முழு இசையின் பொறுப்பையும் யுவனுக்கு வழங்கினார். 






இப்படி அறிமுகமான யுவனுக்கு சூர்யா நடித்த பூவெல்லாம் கேட்டுப்பார் படம் நல்ல அடையாளமாக அமைந்தது. அதுவரை கிராமத்து,கானா என கேட்டுக் கொண்டிருந்த ரசிகர்களை யுவனின் புதுவிதமான இசை கவர்ந்தது. இசையை வகை வகையாக பிரிந்து இதில் இந்த இசையமைப்பாளர் சிறந்தவர் என எல்லோராலும் சொல்லி விட முடியும். அந்த வரிசையில் பிஜிஎம் எனப்படும் பின்னணி இசையில் சிறந்தவர் யார் என கேட்டால் அந்த நிச்சயம் யுவனின் பெயர் தான் முதலிடத்தில் இருக்கும். 


தீனா, பில்லா, மங்காத்தா, ராம், சண்டக்கோழி, புதுப்பேட்டை, மன்மதன், வல்லவன், பருத்தி வீரன், தாமிரபரணி என பல படங்களின் பிஜிஎம்-ஐ கேட்டாலே நமக்கு புல்லரிக்கும். தந்தை இளையராஜாவின் சாயல் துளி கூட இல்லாமல்  இருப்பது தான் யுவனின் பலமே. அதுவே 25 ஆண்டுகளாக அவர் முன்னணி இசையமைப்பாளராக கொண்டாடப்பட காரணம். 150 படங்களுக்கும் மேல் இசையமைத்துள்ள யுவனின் குரலை கேட்டாலே, சொக்கிப் போய் விடுவார்கள். 






போகாதே போகாதே, ஒருநாளில் வாழ்க்கை, சாய்ந்து சாய்ந்து, என் காதல் சொல்ல, ஏதோ ஒன்று என்னை தாக்க போன்ற பாடல்களில் யுவனின் குரல் மேஜிக் செய்திருக்கும். கமல், ரஜினி,விக்ரம் போன்ற சில நடிகர்கள் தவிர்த்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலரின் படங்களில் யுவன் பணியாற்றியுள்ளார். தன் இசை மட்டுமில்லாமல் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், அனிருத் உள்ளிட்டவர்களின் இசையிலும் யுவன் பாடியுள்ளார்.


இடையில் இசைக்கு கொஞ்சம் இடைவெளி விட்டு தயாரிப்பாளராகவும் களமிறங்கிய யுவன் மீண்டும் இசையில் தனது கவனத்தை செலுத்த தொடங்கியுள்ளார். சமீபத்தில் அவர் இசையில் குருதியாட்டம், விருமன் ஆகிய படங்கள் வெளியானது.  இதனைத் தொடர்ந்து காஃபி வித் காதல், ஏஜென்ட் கண்ணாயிரம், பரம்பொருள்,லவ் டுடே, ராம் - நிவின் பாலி இணையும் படம் என மீண்டும் தமிழ் சினிமாவில் மோஸ்ட் வாண்டட் இசையமைப்பாளராக யுவன் மாறியுள்ளார். 






ஆசை நூறு வகை பாடல் மூலம் தமிழ் நாட்டில் "ரீமிக்ஸ்” கலாச்சாரத்தை தொடங்கி வைத்த பெருமையும் யுவனையே சேரும். அப்படி ரீமிக்ஸ் செய்ய நினைத்தவர்கள் ஒரிஜினல் பாடலை கெடுக்கும் வகையில் இசையமைத்தனர். ஆனால் யுவன் அப்படியே இதனை மாற்றி ஒரிஜினல் பாடல்களில் பாடியவர்களின் குரலையே பயன்படுத்தி பின்னணி இசையமைத்து அதிலும் யுவன் புதுமை சேர்த்தார். அமீர், செல்வராகவன், ராம், வெங்கட் பிரபு, தியாகராஜன் குமாரராஜா உள்ளிட்டோர் தங்கள் படங்களில் யுவன் இல்லாமல் வேலை செய்ய மாட்டார்கள். இதுவே அவரது இசைக்கான வெற்றி. 






இசை ரசிகர்களை கேட்டால் யுவனின் இசையை போதை மருந்து என்பார்கள். அது கொடுக்கும் மகிழ்ச்சி அளவில்லாதது. அந்த அளவில்லாத மகிழ்ச்சியை எப்போதும் அவர் கொடுக்க வேண்டும் என்பதே அனைவரின் ஆசை. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் யுவன்..!