தமிழ் சினிமாவில் எப்போதும் எனர்ஜியாக இருக்கும் இசையமைப்பாளர்களில் ஒருவரான தேவி ஸ்ரீ பிரசாத் இன்று தனது 44வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
திஸ் இஸ் டிஎஸ்பி
ஆந்திர மாநிலம் அமலாபுரம் என்னும் ஊரில் 1979 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் தேதி பிறந்தார் தேவி ஸ்ரீ பிரசாத். அவரது தந்தை ஜி. சத்யமூர்த்தி , தெலுங்கு சினிமாவில் பிரபலமான திரைக்கதையாசிரியர் ஆவார். இவருக்கு அம்மா வழி தாத்தா பிரசாத் ராவ் மற்றும் பாட்டி தேவி மீனாட்சி ஆகியோர் நினைவாக தேவி ஸ்ரீ பிரசாத் என பெயரிடப்பட்டது. சென்னையில் வளர்ந்த அவரை ரசிகர்கள் செல்லமாக பெயரை சுருக்கு “டி.எஸ்.பி” என அழைக்கின்றனர்.
19 வயதில் தொடங்கிய பயணம்
தேவி ஸ்ரீ பிரசாத் 1999 ஆம் ஆண்டு தெலுங்குத் திரைப்படமான தேவியின் மூலம் தனது 19வது வயதில் திரைப்பட இசையமைப்பாளராக அறிமுகமானார். தொடர்ந்து சில ஹிட்டான தெலுங்கு படங்களுக்கு இசையமைத்த அவர், 2002 ஆம் ஆண்டு தமிழில் பத்ரி படத்தின் மூலம் அறிமுகமானார். விஜய் நடித்த அந்த படத்தில் பின்னணி இசை அமைத்ததோடு, “ஏஞ்சல் வந்தாளே” மற்றும் “கிங் ஆஃப் சென்னை” பாடல்களை அழகாக பாடி தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் தனியிடம் பிடிக்க தயாரானார்.
இதன்பின்னர் மழை, சச்சின், இனிது இனிது காதல் இனிது, ஐஸ், திருப்பாச்சி, மாயாவி, ஆறு, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம், வில்லு, சிங்கம், கந்தசாமி, குட்டி, மன்மதன் அம்பு, வேங்கை, அலெக்ஸ் பாண்டியன், சிங்கம் 2, வீரம், பிரம்மன், புலி, சாமி 2 உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்தார். தற்போது மிக நீண்ட இடைவெளிக்குப் பின் நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’ படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
அதேசமயம் தெலுங்கில் தேவி ஸ்ரீ பிரசாத் கொடி கட்டி பறக்கிறார். அவர் இசையமைக்கும் அத்தனை பாடல்களும் துள்ளல் இசையுடன் கேட்டவுடன் ரசிகர்களுக்கு பிடித்து விடும் வண்ணம் உள்ளது. இப்படியான நிலையில் அவர் நிறைய பாடல்களையும் தமிழில் பாடியுள்ளார்.
தனித்துவமான குரல்
“கண் மூடி திறக்கும்போது, காதலுக்கு கண்கள் இல்லை, தீம்தனக்கா தில்லானா, கந்தசாமி, சிங்கம் சிங்கம், மன்மதன் அம்பு, என்ன சொல்லப் போற, நல்லவன்னு சொல்வாங்க” என சில பாடல்களையும் பாடியுள்ளார். விஜய் ஆண்டனி இசையமைத்த ‘காதலிக்க பெண்ணொருத்தி’ பாடலில் தோன்றி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தார் தேவி ஸ்ரீ பிரசாத்.
பாடலாசியராகவும் பல படங்களில் பணியாற்றியுள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்தி படங்களிலும், ஆல்பம் பாடல்களிலும் தனக்கென தனி முத்திரை பதித்த தேவி ஸ்ரீ பிரசாத் மேன்மேலும் வளர வாழ்த்துகள்..!