பிரபல மலையாள இயக்குநர் சங்கீத் சிவன் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவர் பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் சகோதரர் ஆவார். 1989 ஆம் ஆண்டு ஆமீர்கான் நடிப்பில் வெளியான ராக் படத்தில் நிர்வாக தயாரிப்பாளராக சங்கீத் சிவன் தனது திரையுலக பயணத்தை தொடங்கினார். பின்னர் மலையாளத்தில் 1990ம் ஆண்டு மறைந்த நடிகர் ரகுவரன் நடித்த வியூஹம் படம் இயக்குனராக அறிமுகமானார். 1992 ஆம் ஆண்டு வெளியான யோதா படம் சங்கீத் சிவனுக்கு திருப்புமுனையாக அமைந்தது. இதன்மூலம் பாலிவுட் வரை சங்கீத் சிவனின் புகழ் பரவியது.
இதன் பின்னர் டாடி, கந்தர்வம், ஜானி, நிர்ணயம் என தொடர்ச்சியாக மலையாள படங்களை இயக்கிய இவர், 1998 ஆம் ஆண்டு இந்தி திரையுலகில் இயக்குநராக எண்ட்ரீ கொடுத்தார். 1998 ஆம் ஆண்டு சன்னி தியோல், சுஷ்மிதா சென் நடிப்பில் வெளியான ஜோர் படத்தை இயக்கினார். தொடர்ந்து சுரா லியா ஹை தும்னே, க்யா கூல் ஹை ஹம், அப்னா சப்னா மணி மணி, ஏக் தி பவர் ஒன், கிளிக், யாம்லா பக்லா தீவானா 2, பிரம் என பல இந்தி படங்களை இயக்கியுள்ளார்.
இதற்கு நடுவில் சிநேகபூர்வம் அண்ணா, இடியட்ஸ், ஈ என மலையாள திரையுலகிலும் அவ்வப்போது சங்கீத் சிவனின் படங்கள் வெளியானது. இவருக்கு ஜெயஸ்ரீ என்ற மனைவியும், சஜனா மற்றும் சாந்தனு என இரு குழந்தைகளும் உள்ளனர். இதனிடையே 61 வயதில் உடல்நலக்குறைவால் மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சங்கீத் சிவன் சிகிச்சை பலனின்றி மே 8 ஆம் தேதி காலமானார்.
சங்கீத் சிவனின் மறைவுக்கு இந்தி மற்றும் மலையாள திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பதிவில், “சங்கீத் சிவன் சார் இப்போது இல்லை என்ற செய்தி மிகுந்த வருத்தமும், அதிர்ச்சியும் அடைந்தேன். நீங்கள் விரும்புவது எல்லாம் ஒவ்வொரு முறையாக ஒரு புதியவராக உங்கள் மீது மற்றவர்கள் நம்பிக்கை வைத்து வாய்ப்பளிக்க வேண்டும் என நினைப்பது தான். நீங்கள் மென்மையான குணங்கள் கொண்ட அற்புதமான மனிதர். சங்கீத் சிவனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட சார்ந்தோர் அனைவருக்கும் இந்த நேரத்தில் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன். உங்கள் ஆன்மா சாந்தியடைட்டும்” என தெரிவித்துள்ளார்.