உருகுதே.. மருகுதே...என்ற சொல்லுக்கு ஏற்ப தனது குரலால் ரசிகர்களை கட்டிப்போட்டு கொண்டிருக்கும் பாடகி ஸ்ரேயா கோஷல் இன்று தனது 48வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 


4 வயதில் தொடங்கிய இசைப்பயணம்


1984 ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி மேற்கு வங்க மாநிலத்தில் பிறந்த ஸ்ரேயா கோஷல் வளர்ந்தது என்னவோ ராஜஸ்தானில் தான். தனது நான்காவது வயதில் இசையை கற்கத் தொடங்கிய அவர் அதன் அனைத்து பிரிவுகளிலும் நன்கு தேர்ச்சி பெறுகிறார். பிறகு தனது 14வது வயதில் 1998 ஆம் ஆண்டு “பென்தெக்கி பீனா” முதல் ஆல்பமாக  வெளியிடுகிறார். இப்படி இருக்கையில் ஸ்ரேயா கோஷலுக்கு திருப்புமுனையாக அவரது 16 வது வயதில் பங்கேற்ற ரியாலிட்டி ஷோ அமைந்தது.


2000 ஆம் ஆண்டு ஜி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரிகமப ஷோவில் பங்கேற்று டைட்டில் வின்னர் ஆனார். இந்நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபல இயக்குனரான சஞ்சய் லீலா பன்சாலியின் தாயார் ஸ்ரேயாவின் பாடும் திறனை கண்டு தனது மகனை அழைத்து நிகழ்ச்சியை பார்க்க சொல்லி இருக்கிறார் அவரும் ஸ்ரேயா கோஷலின் குரலால் கவரப்பட்டு தனது அடுத்த படத்திலே பாடகியாக அறிமுகப்படுத்தினார். 


ஒத்திகை மட்டுமே போதும்


2002 ஆம் ஆண்டு வெளியான பன்சாலியின் “தேவதாஸ்” படத்தில் பாடகியாக ஸ்ரேயா கோஷல் அறிமுகம் செய்யப்பட்டார். அறிமுகப் படத்திலேயே ஐந்து பாடல்களை பாடிய ஸ்ரேயா கோஷல் ரசிகர்களை கவர்ந்து இன்றளவும் அதனை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் ஒரு சுவாரஸ்யம் இருக்கிறது. பாடச் சென்ற ஸ்ரேயா கோஷல் பாடுவதற்கு முன் ஒரு முறை ஒத்திகை பார்த்து உள்ளார். தன் குரல் எப்படி இருக்கும், படக்குழுவினர் என்ன சொல்லப்போகிறார்கள் என நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால் அன்றைக்கு ஸ்ரேயா  ஒத்திகையாக பாடியதை பாடலாக பதிவு செய்து விட்டதாக சஞ்சய் லீலா பன்சாலி சொல்ல அங்கேயே ஸ்ரேயா வெற்றி பெற்றதாக உணர்ந்துள்ளார். 




தமிழ் எண்ட்ரீ


 ஸ்ரேயாவின் முதல் தமிழ் பாடலாக 2002 ஆம் ஆண்டு வெளியான ஆல்பம் படத்த இடம் பெற்ற  “செல்லமே செல்லம்” பாடல் அமைந்தது. ஹம்மிங் கொடுத்துக்கொண்டே அவர் அறிமுகமான அந்த பாடல் ரசிகர்களின் பேவரைட்டாக உள்ளது. தமிழில் இளையராஜாவின் இசையில் சொல்ல மறந்த கதையில் “குண்டு மல்லி” பாடல் மூலம் யார் இந்த குரலுக்கு சொந்தக்காரி என கேட்கும் அளவுக்கு அனைவரையும் கவர்ந்தார். 


தமிழ் சினிமாவில் இளையராஜா தொடங்கி மணி சர்மா, கார்த்திக் ராஜா,  கீரவாணி, ஏ.ஆர்.ரஹ்மான், யுவன் சங்கர் ராஜா, வித்யாசாகர், பரத்வாஜ், ஹாரிஸ் ஜெயராஜ், தேவா, ஜி.வி.பிரகாஷ், ஸ்ரீகாந்த் தேவா, சுந்தர்.சி பாபு, ஜேம்ஸ் வசந்தன், விஜய் ஆண்டனி, தீனா, ஜோஸ்வா ஸ்ரீதர், தேவி ஸ்ரீ பிரசாத், சித்தாத் விபின், சாம் சிஎஸ். ஜஸ்டின் பிரபாகரன் என அனைவருக்கும் இசையிலும் ஸ்ரேயா கோஷல் பாடியுள்ளார்.


மறக்க முடியாத பாடல்கள்


தமிழில் 200க்கும் அதிகமான பாடல்களை ஸ்ரேயா கோஷல் பாடி இருந்தாலும் என்றைக்கும் அவரின் சிறந்த பாடல்களாக ரசிகர்களால் மறக்க முடியாத சில பாடல்கள் உள்ளன. எனக்குப் பிடித்த பாடல், உன்ன விட, பனித்துளி பனித்துளி, அய்யய்யோ, நன்னாரே, மன்னிப்பாயா, உன் பேரை சொல்லும் போதே, அம்மாடி அம்மாடி,  கண்டாங்கி கண்டாங்கி, சொல்லிட்டாலே அவ காதல் , சகாயனே , மிருதா மிருதா, போன உசுரு வந்துருச்சு, ராட்சசமாமனே என இவை டாப் லிஸ்டில் உள்ளது. 


குவிந்த விருதுகள்


ஸ்ரேயா கோஷல் இதுவரை 5 முறை தேசிய விருதை பெற்றுள்ளார். தேவதாஸ் (2002) , பாஹலி (2005), ஜப் வி மேட் (2007) ஆகிய இந்தி படங்களுக்கும்,  2008 ஆம் ஆண்டில் பெங்காலி மற்றும் மராட்டி ஆகிய இரு படங்களுக்கு ஸ்ரேயா கோஷல் தேசிய விருதுகளை பெற்றார். பிலிம்பேர் விருதுகளை தமிழில் சில்லுனு ஒரு காதல், அங்காடித்தெரு படங்களுக்காகவும், தமிழ்நாடு அரசின் மாநில விருதை சில்லுனு ஒரு காதல், கும்கி படத்துக்காகவும் பெற்றுள்ளார். அதுபோக இசைத்துறையில் பெறாத விருதுகளே இல்லை என்னும் அளவுக்கு ஏராளமான விருதுகளை ஸ்ரேயா கோஷல் பெற்றுள்ளார்.




தனிப்பட்ட வாழ்க்கை


10 ஆண்டுகள் காதலுக்கு பிறகு 2015 ஆம் ஆண்டு ஸ்ரேயா கோஷல் தனது பள்ளி பருவ நண்பரான சிலாத்யா முக்கோபாத்யாவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு கடந்த ஆண்டு மகன் பிறந்தான். 


ஆல் இன் ஆல் ராணி 


ஸ்ரேயா கோஷல் தமிழ்,மலையாளம்,தெலுங்கு,கன்னடம்,மராத்தி, குஜராத்தி, பெங்காலி, அசாமி, நேபாளி, ஒடியா, போஜ்புரி, பஞ்சாபி, உருது போன்ற பலமொழிகளில் பாடி இந்திய சினிமாவின் முன்னணி பாடகியாக தன்னை உயர்த்திக் கொண்டார். உலகின் தலைசிறந்த ஃபோர்ட்ஸ் இதழில் இந்தியாவின் 100 சிறந்த பிரபலங்களில் ஒருவராக ஸ்ரேயா கோஷல் ஐந்து முறை இடம் பெற்றுள்ளார். அதேபோல் டெல்லியில் உள்ள மேடம் துசா்ட்ஸ் அருங்காட்சியகத்தில் இவருக்கு மெழுகுச்சிலை அமைக்கப்பட்டது மெழுகுச்சிலை அமைக்கப்பட்ட முதல் இந்திய பாடகி என்ற பெருமையை ஸ்ரேயா கோஷல் பெற்றார். 


ஸ்ரேயா கோஷலின் குரல் மீது  ரசிகர்கள் மட்டுமல்ல அந்த இசை கூட ஒருவித காதல் கொள்ளும். அப்படியான மாயக்குரலின் சொந்தக்காரிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..!