கமர்ஷியல் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் வெளியாகி சூப்பர்ஹிட்டான ‘சமுத்திரம்’ படம் இன்றோடு 22 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
கே.எஸ்.ரவிகுமார் கமர்ஷியல் ஹிட்
பொதுவாக ரசிகர்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு படம் இயக்கும் இயக்குநர்களில் முதன்மையானவர் கே.எஸ்.ரவிகுமார். அவரின் இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு சமுத்திரம் படம் வெளியானது. சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்த இந்த படத்தில் சரத்குமார், முரளி, மனோஜ் பாரதி ராஜா, அபிராமி, சிந்து மேனன், மோனல், காவேரி, ரியாஸ்கான், கவுண்டமணி, செந்தில், மஞ்சுளா, பிரமிட் நடராஜன், ஆகாஷ் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். ஈரோடு சௌந்தர் எழுதிய கதைக்கு கே.எஸ்.ரவிகுமார் திரைக்கதை அமைத்தார். சபேஷ் முரளி இசையமைத்திருந்தார்.
படத்தின் கதை
சரத்குமார், முரளி, மனோஜ் ஆகியோர் அண்ணன் தம்பிகள். உயிரைக் கொடுக்கத் தயாராக உள்ள இந்த சகோதரர்களின் ஒரே தங்கச்சி காவேரி. கோவில் திருவிழாவின் போது சின்னியம்பாளையம் ஜமீன் பிரமிட் நடராஜன் முரளியால் அவமானப்படுத்தப்படுகிறார். இதற்கு பழிவாங்க நினைக்கும் அவர், மகன் ஆகாஷூக்கு காவேரியை திருமணம் செய்து வைத்து வரதட்சணையாக சொத்துகள் அனைத்தையும் எழுதி வாங்குகின்றனர். மேலும் காவேரி கொடுமைப்படுத்தப்படுகிறார்.
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சகோதரர்கள் அவமதிக்கப்படுவதை காவேரியால் தாங்கி கொள்ள முடியவில்லை. இதனிடையே மனோஜ், மோனல் கல்யாணம் நிச்சயிக்கப்படுகிறது. இதற்கு காவேரியை அனுப்பக்கூடாது என தீர்க்கமாக இருக்கும் பிரமிட் நடராஜன், ஆகாஷ் அவரை துன்புறுத்துகின்றனர். இதைக் கண்டு கோபமடையும் சரத்குமார், முரளி, மனோஜ் மீண்டும் பழிவாங்க காவேரி வயிற்றில் இருக்கும் குழந்தையை அழிக்க ஆகாஷ் முயல இறுதியில் என்ன நடக்கிறது என்பதே இந்த படத்தின் கதையாகும்.
படம் பற்றிய முக்கிய தகவல்கள்
இப்படம் தெலுங்கில் சிவராம ராஜு என்றும், கன்னடத்தில் பரமசிவா என்றும், பெங்காலியில் கர்தாப்யா என்றும் ரீமேக் செய்யப்பட்டது. தேவாவின் படங்களுக்கு பின்னணி இசையமைத்து வந்த அவரது சகோதரர்களான சபேஷ் முரளி சமுத்திரம் படம் மூலம் முழுநேர இசையமைப்பாளர்கள் ஆனார்கள். படத்தில் இடம்பெற்ற 5 பாடல்களும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், சமுத்திரம் படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றிப் படமாக அமைந்தது. கண்டமணி மற்றும் செந்தில் ஆகியோரின் காமெடி படத்திற்கு பலமாக அமைந்தது. சமுத்திரம் படம் அல்ல...ரசிகர்களின் மனதில் என்றும் பதிந்த காவியம்..!