1990களின் காலக்கட்டத்தில் வெற்றிகரமான இயக்குநராக திகழ்ந்த விக்ரமன் சினிமாவில் சரிவை சந்தித்த நிகழ்வைப் பற்றிக் காணலாம்.
தமிழ் சினிமாவில் குடும்ப இயக்குநர்கள் பட்டியலில் விக்ரமனுக்கு தனி இடம் உண்டு. 1990ம் ஆண்டு புது வசந்தம் என்ற படத்தின் மூலம் இயக்குநராக எண்ட்ரீ கொடுத்தார். தொடர்ந்து கோகுலம், நான் பேச நினைப்பதெல்லாம், புதிய மன்னர்கள், பூவே உனக்காக, சூரிய வம்சம், உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், வானத்தைப்போல, உன்னை நினைத்து, பிரியமான தோழி, சென்னைக் காதல், மரியாதை, நினைத்தது யாரோ ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
இதில் சென்னைக் காதல் படத்தில் பரத், ஜெனிலியா, ரோபோ சங்கர், இமான் அண்ணாச்சி, ராதா ரவி என பலரும் நடித்திருந்தனர். ஜோஸ்வா ஸ்ரீதர் இப்படத்துக்கு இசையமைத்தார். வழக்கமான தனது பாணியில் இருந்து விலகி முற்றிலும் வித்யாசமாக இப்படத்தை விக்ரமன் இயக்கியிருந்தார். ஆனால் இப்படம் அவரின் தோல்விப் படங்களில் ஒன்றாக அமைந்தது. அதன்பிறகு தமிழில் அவர் எடுத்த 2 படங்களும் சரியாக செல்லவில்லை. இந்த நிலையில் சென்னைக் காதல் படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்தார்.
ஒரு நேர்காணலில் பேசிய கலைப்புலி எஸ். தாணு, “விக்ரமன் என்னிடம் சொல்லிய கதை அருமையாக இருந்தது. இரண்டு நண்பர்களை வைத்து கதை சொன்னார். அது கண்டிப்பாக வெற்றி பெறும் என தோன்றியது. அதனால் அந்த படத்தை எடுக்கலாம் என சொன்னேன். ஆனால் விக்ரமன், இல்லை சார். இன்றைக்கு இருக்கக்கூடிய இளைஞர்களுக்கு கருத்து சொல்வது போல நான் ஒரு கதை வைத்திருக்கிறேன். இது என்னுடைய ஃபார்முலாவில் இருக்கும் என கூறி சென்னைக் காதல் படத்தின் கதையை சொன்னார்.
நான் அதைக்கேட்டு விட்டு நீங்கள் முன்னால் சொன்ன கதை தான் எனக்கு பிடிச்சிருக்கும். ஆனால் சென்னைக் காதல் படத்தின் கதையை உங்களுக்காக, நீங்க ஆசைப்பட்டீங்கன்னு நான் எடுக்கிறேன் என சொல்லி விட்டேன். படம் ஆரம்பிச்சோம். அந்த படம் திருப்திகரமாக போகவில்லை. நான் படம் ரிலீசான பிறகு விக்ரமனுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை எடுத்துக்கொண்டு சந்திக்க செல்கிறேன். ரூ.16 லட்சத்திற்காக டிடி எடுத்துக் கொண்டு போயிருந்தேன். வாங்க மாட்டேன் என விக்ரமன் சொன்னார்.
ஏன் என நான் கேட்டதற்கு, உங்க கதையை நான் எடுக்காமல் இருந்தது என்னுடைய தப்பு. எனக்காக நான் விரும்புன கதையை நீங்க எடுத்திங்க. அதனால் உங்களுக்கு இழப்பு ஏற்பட்டு விட்டது. இதற்கும் நான் தான் காரணம். அதனால் இந்த பணத்தை நான் வாங்க மாட்டேன் என அந்த டிடியை என்னுடைய காரில் வைத்து விட்டு சென்றார் என கூறியுள்ளார்.