அரசு ஊழியர்கள் தொடர் போராட்டம்
அரசு ஊழியர்கள் தான் அரசு அறிவிக்கும் திட்டங்களை கடை நிலையில் உள்ள மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் முக்கிய பாலமாக உள்ளனர். எனவே என்ன தான் புதிய புதிய அறிவிப்புகளை அரசு வெளியிட்டாலும் மக்களை சென்று சேர்வதற்கு அரசு ஊழியர்களின் பணி முக்கியமானது. அந்த அரசு ஊழியர்களுக்கும் அரசு பல்வேறு திட்டங்கள், சலுகைகளை அறிவித்தாலும், பழைய ஓய்வூதிய திட்டம், ஊதிய உயர்வு, காலிப்பணியிடம் நிரப்புதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் காரணமாக அரசு ஊழியர்களை சமாதானம் செய்யும் வகையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த பிப்ரவரி மாதம் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். இதில் முக்கியமானது கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய சரண் விடுப்பு தொடர்பான அறிவிப்பாகும்.
பழைய ஓய்வூதிய திட்டம்
மேலும் திருமண உதவி தொகை, மருத்துவ காப்பீடு, முன் பண உதவி என அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளியானது, அதே நேரம் அரசு ஊழியர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ள மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக அறிவிப்பு ஒன்றையும் முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார். இதன் படி மூத்த ஐஏஎஸ் அதிகாரி ககன் தீப்சிங் பேடி தலைமையில் குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டார். இந்த குழு செப்டம்பர் மாதம் அறிக்கை சமர்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதற்கு ஏற்ப அரசு ஊழியர்கள் சங்கம், நிதித்துறை அதிகாரிகளுடன் பல கட்ட ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனைக்கு பிறகு கடந்த ஆக்டோபர் மாதம் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இருந்த போதும் தமிழக அரசு ஓய்வூதியம் தொடர்பாக எந்தவித முடிவும் எடுக்கவில்லை. இதனையடுத்து ஜனவரி 6ஆம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்தது அரசு ஊழியர்கள் சங்கம். இந்த நிலையில் தமிழக அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் கொண்ட அமைச்சர்கள் குழு அரசு ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை எந்த வித முன்னேற்றமும் இல்லாத நிலையை எட்டியது. எனவே திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என அரசு ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இந்த சூழ்நிலையில் ஓய்வூதியம் தொடர்பாக இறுதி அறிக்கையை ககன் தீப்சிங் பேடி, முதலமைச்சர் ஸ்டாலினிடம் சமர்பித்தார்.
ஜனவரி 6ஆம் தேதி அமைச்சரவை கூட்டம்
இதனையடுத்து அந்த அறிக்கையில், பழைய ஓய்வூதிய திட்டம், பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதிய திட்டங்களில் எந்த திட்டம் சிறந்தது, அரசு ஊழியர்களுக்கு எந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும் எனவும் பட்டியலிடப்பட்டுள்ளது. எனவே அரசு ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளுக்கு ஆலோசித்து முடிவெடுக்கும் வகையில் வருகிற ஜனவரி 6ஆம் தேதி அமைச்சரவை கூட்டத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஜனவரி 6ஆம் தேதி நடைபெறவுள்ள கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவது, காலிப்பணியிடங்களை நிரப்புவது, ஊதிய உயர்வு தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆளுநர் உரை - அமைச்சரவை ஒப்புதல்.?
மேலும் அன்றைய தினமே அரசு ஊழியர்களின் தொடர் போராட்டத்திற்கு முடிவு கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அமைச்சரவை கூட்டத்தில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஜனவரி 20ஆம் தேதி கூடவுள்ள நிலையில், புதிய அறிவிப்புகள், ஆளுநர் உரைக்கு அமைச்சரவையில் ஒப்புதல் உள்ளிட்டவைகைள குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.