தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத காமெடியனாக வலம் வந்து இன்று ஹீரோவாக ப்ரோமோஷன் பெற்றுள்ள நடிகர் சூரி இன்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
மக்களை மகிழ்விக்கும் கலைஞன் ‘சூரி’
திரையில் நம்மை மகிழ்விக்கும் கலைஞர்கள் எல்லோரும் பெரிய குடும்ப பின்னணியில் இருந்து வருவதில்லை. அப்படி வந்தாலும் தங்கள் முயற்சியின் மூலமாகவே மக்களின் மனதில் இடம் பிடிப்பார்கள். இதில் நகைச்சுவை நடிகர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. தங்களை கேலிக்குள்ளாக்கி, வருத்திக் கொண்டு பிறரை சிரிக்க வைத்து மகிழ்ச்சி காண்பதே தாங்கள் படும் கஷ்டங்களுக்கு அருமருந்து என பிரபலங்களே சொல்வார்கள். அப்படிப்பட்ட நடிகர்களில் ஒருவர் தான் சூரி.
மதுரை மாவட்டம் ராஜாக்கூர் என்ற கிராமத்தில் முத்துசாமி மற்றும் வேங்கையரசி அம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்த சூரி பொருளாதார வசதியின்மையால் 8 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு கிராமத்தில் கூலி வேலைகளை செய்தார். அப்போது அவருக்குள் சினிமாவில் நடிக்க வேண்டுமென்ற எண்ணம் இருந்தது.இதனால் சென்னைக்கு வாய்ப்பு தேடி வந்தார். இங்கும் கிடைத்த வேலைகளை செய்துக் கொண்டே சினிமாவில் வாய்ப்பு தேடினார்.
திருப்புமுனையாக அமைந்த பரோட்டா காமெடி
ஆனால் திரைக்கு பின்னால் தான் இவருக்கான முதல் வாய்ப்பு அமைந்தது. மம்முட்டி நடித்த மறுமலர்ச்சி படத்தில் ஒரு காட்சியில் தோன்றும் அவர், 10க்கும் மேற்பட்ட சூப்பர் ஹிட் படங்களில் ஒரே ஒரு நொடி மட்டுமே தோன்றுவார். இப்படியான நிலையில் தான் சூரிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது 2009 ஆம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடி குழு படம். இதில் அசால்ட்டாக 50 பரோட்டாக்களை சாப்பிடுபவராக அவர் செய்த சம்பவம் சரித்திரமாக மாறியது. தனக்கென ஒரு பாடி லாங்குவேஜ், வட்டார மொழியை உருவாக்கி கொண்டு ரசிகர்களிடம் புகழ்பெற ஆரம்பித்தார்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், களவாணி, நான் மகான் அல்ல, சுந்தரப்பாண்டியன், மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா, ஜில்லா, பூஜை, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரத்துரை, ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், கடைக்குட்டி சிங்கம் என 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டார்.
‘மனுசன் பின்னிருவாரு’ என சொல்லும் ரசிகர்கள்
சூரியின் வசனமொழி அனைவருக்கும் சிரிப்பலையை வரவழைக்கும் வகையில் இருக்கும். அதுவும் கிராமத்து பின்னணியிலான கதையில் ‘மனுசன் பின்னிருவாரு’ என ரசிகர்கள் சொல்லும் அளவுக்கு அவ்வளவு இயல்பாக நடித்திருப்பார். தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்கள் அனைவரின் படங்களிலும் சூரி நடித்துள்ளார். வடிவேலு, விவேக், சந்தானம் ஆகியோருக்கு பின்னால் தனது திறமையால் முன்னணி காமெடி நடிகராக உயர்ந்தார். ஆனால் அவர் கேட்காமலேயே ஹீரோவாகும் வாய்ப்பும் சூரியை தேடி வந்தது.
அதுவும் தமிழ் சினிமாவில் அனைத்து பிரபலங்களும் நடிக்க ஆசைப்படும் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் அவர் ஹீரோவாக நடித்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. சொல்லப்போனால் சூரியின் நகைச்சுவையை தாண்டி நடிப்புத்திறமையும் வெளிப்பட்டது. விடுதலை படத்திற்காக சிக்ஸ் பேக் உடற்கட்டு வைப்பது தொடங்கி பல பரிணாமங்களை சூரி செய்தார். முயற்சி செய்தால் நிச்சயம் ஒருநாள் வெற்றி நம்மை தேடி வந்து சேரும் என்பதற்கு தமிழ் சினிமாவில் சூரியும் ஒரு எடுத்துக்காட்டு...!