2023-ஆம் ஆண்டின் முதல் பாதி முடிவடைய உள்ள நிலையில், இந்த 6 மாதங்களில் ரிலீஸான படங்கள் குறித்து பிரபல தியேட்டர் ஒன்று ட்வீட் செய்துள்ளது.
உலக அளவில் திரைப்படங்களும், திரை மொழிகளும் இருந்தாலும் தமிழ் சினிமாவையும், அதன் ரசிகர்களையும் அடித்துக் கொள்ளவே முடியாது. அதுவும் தென் தமிழ்நாடா? அல்லது வட தமிழ்நாடா? என்னும் அளவுக்கு சினிமா மீது அளவு கடந்த நம்பிக்கையை வைத்திருப்பார்கள். எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் தங்களை உயிர்ப்புடன் வைத்திருப்பது என்னவோ சினிமா தான் என்பது அவர்களின் கூற்றாக உள்ளது.
இப்படியான நிலையில் சினிமா என்றாலே வெள்ளிக்கிழமை ரிலீஸ் என்ற கான்செப்டை மாற்றி வசூலுக்காகவும், அதிக அளவிலான ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைக்கும் நோக்கிலும் வியாழக்கிழமை அல்லது பண்டிகைக்கு 4,5 நாட்கள் முன்னதாகவே படங்கள் வெளியாகி விடுகிறது. டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் பெருகி விட்ட நிலையில் படம் ரிலீஸான ஒரு மணி நேரத்துக்குள்ளாகவே விமர்சனங்கள் வந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை பொய்யாக்கி விடுவதும் தொடர்கதையாகி வருகிறது.
இதற்கிடையில் நடப்பாண்டில் முதல் பாதி நிறைவுக்கு வர உள்ளது. இந்த பாதியில் பெரிய நடிகர்களின் படங்கள் மிகவும் குறைவாகவே வந்துள்ளது. பொங்கலுக்கு வெளியான வாரிசு, துணிவு, ஏப்ரலில் வெளியான பொன்னியின் செல்வன் 2 ஆகிய படங்கள் மட்டுமே பெரிய படங்கள் என்ற லிஸ்டில் வந்துள்ளது.
இதனைத் தவிர்த்து 2வது கட்ட பட்டியலில், ரன் பேபி ரன், டாடா, பகாசூரன், வாத்தி, அயோத்தி, அகிலன், கண்ணை நம்பாதே, விடுதலை பாகம் 1, 1947 ஆகஸ்ட் 16, ருத்ரன், துணிவின் குரல், கஸ்டடி, குட் நைட், ராவண கோட்டம், பிச்சைக்காரன் 2, யாதும் ஊரே யாவரும் கேளீர், கழுவேற்றி மூர்க்கன், தீரா காதல், காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம், விடுதலை பாகம் 1 ஆகிய படங்கள் பெரிய எதிர்பார்ப்போடு வெளியானது. ஆனால் இதில் சில படங்கள் மக்களிடம் வரவேற்பை பெற்றாலும் பெரிய அளவில் வசூலை பெறவில்லை.
அடுத்ததாக இந்த மாதம் பெரிய படமாக உதயநிதி ஸ்டாலின், வடிவேலு நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கிய ’மாமன்னன்’ படம் ரிலீஸாக உள்ளது. இதற்கு பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில் சினிமா ரசிகர்களிடம் பிரபலமான திருநெல்வேலியைச் சேர்ந்த ராம் முத்துராம் சினிமாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “2023 இன் முதல் பாதி முடியப்போகிறது, இதுவரை பொங்கல் படங்கள் மற்றும் PS2 மட்டுமே மட்டுமே சிறந்த வெளியீடாக அமைந்துள்ளது.
சில நல்ல வெளியீடுகள் இருந்தாலும் எதுவும் சிறப்பாக அமையவில்லை. மார்ச் இறுதி, ஏப்ரல் 14 ஆம் தேதி, மே மாத வெளியீடுகள் என பல வாய்ப்புகள் வெற்றியை தவறவிட்டு விட்டது. தமிழ் சினிமாவில் இவ்வளவு வறட்சியான கோடை வெளியீட்டை பார்த்ததில்லை” என தெரிவித்துள்ளது. அதேசமயம் இரண்டாம் பாதி ஆண்டில் ரஜினியின் ஜெயிலர், மாவீரன், லியோ, கேப்டன் மில்லர், ஜப்பான், அயலான் என ஏகப்பட்ட பெரிய நடிகர்களின் படங்கள் வரிசைக்கட்டி நிற்பதால் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்து காத்திருக்கிறது.