தொழிலதிபர், நடிகர், தயாரிப்பாளர் அருள் சரவணன் குழந்தைகளுடன் சுதந்திர தினம் கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 


பொதுமக்களிடையே பிரபலமாக திகழும் லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனர் அருள் சரவணன், தங்கள் நிறுவனத்தின் விளம்பரங்கள் மூலம் நன்றாக பரீட்சையமானார். இந்த விளம்பரத்திற்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டாலும் தொடர்ந்து அசராமல் அடுத்தடுத்த தளங்களுக்குள் அடியெடுத்து வைத்து வருகிறார். அப்படியாக கடந்த ஆண்டு வெளியான ‘தி லெஜண்ட்’ படத்தின் மூலம் ஹீரோவாக அதிரடி எண்ட்ரீ கொடுத்தார். 


சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனங்களின் விளம்பரங்களை இயக்கி வந்த இரட்டை இயக்குநர்களான ஜேடி-ஜெர்ரி தான் அந்த படத்தை இயக்கிய நிலையில், விவேக், பிரபு முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்த இப்படம் படுதோல்வி அடைந்தது. ஆனாலும் தன் முயற்சியில் சற்றும் சளைக்காத அருள் சரவணன், அடுத்தப்படத்திற்காக கதைகளை கேட்டு வருகிறார். இப்படியான நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 


அதில், குழந்தைகளுடன்  சுதந்திர தினத்தை கொண்டாடிய அருள் சரவணன், அவர்களுக்கு இனிப்புகள், ஆடைகள் வழங்கினார். தொடர்ந்து பேசிய அருள் சரவணன், “அனைவருக்கும் வணக்கம். எல்லோருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள். குழந்தைகள் தாய், தகப்பன் சொல்றதை கேட்டு, நல்லபடியா மதிச்சு வாழணும். ஏன் என கேட்டால், இந்த உலகத்தில் பெற்றவர்கள் மாதிரி குழந்தைகளுக்கு நல்லது செய்றவங்க, நினைக்கிறவங்க யாருமே கிடையாது.






ஆகவே, அவர்கள் நமக்கு கடவுள் மாதிரி. பெற்றோர்கள் சொல்றதை கேட்டு, மதிச்சு வாழ்ந்ததா தான் வாழ்க்கையில உயர முடியும். அதேபோல் ஆசிரியர்கள், என்ன சொல்லிக்கொடுக்கிறார்களோ அதை கற்று நல்ல மதிப்பெண் பெற்று அதுதான் உங்கள் எதிர்கால வாழ்க்கையை நிர்ணயிக்கும். என்றைக்கும் இது இரண்டையும் மனதில் வைத்து செயல்படுங்கள். அது உங்கள் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும்’ என தெரிவித்துள்ளார். 


அப்போது சிறுவன் ஒருவன் அவரிடம், ‘நீங்கள் நடிச்ச லெஜண்ட்ஸ் படம் பார்த்தேன். ரொம்ப நல்லா இருந்துச்சு. அடுத்த படத்தை சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்க’ என சொல்கிறார். அதற்கு, ‘ஒரு நல்ல கதை அமைய வேண்டும் என்றுதான் இவ்வளவு நாளா வெயிட் பண்ணேன். இப்ப நல்ல கதை அமைஞ்சிருக்கு. எவ்வளவு சீக்கிரம் எடுக்க முடியுமோ எடுத்துட்டு ரிலீஸ் பண்றேன்’ என அருள் சரவணன் கூறுகிறார். தொடர்ந்து ஜெயிலர் படத்தில் இடம் பெற்ற ‘ஹூக்கும்’ பாடலுக்கு குழந்தைகளுடன் டான்ஸ் ஆடினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.